சிவகிரி அருகே, இரு சமூகத்தினர் மோதலால் பரபரப்பு: கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகள் அடித்து உடைப்பு
சிவகிரி அருகே இரு சமூகத்தினர் மோதலால் கோவிலுக்குள் புகுந்து மர்ம நபர்கள் சாமி சிலைகளை அடித்து உடைத்தனர். இதனால் கடைகள் அடைக்கப்பட்டன. சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
ஈரோடு,
சிவகிரி தலையநல்லூரில் புகழ்பெற்ற பொன்காளியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இந்த கோவிலின் வகையறாவான காளியண்ணன் கோவில் தொப்பபாளையம் என்ற இடத்தில் சிவகிரி-கொடுமுடி ரோட்டு ஓரம் உள்ளது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சாலை விரிவாக்கத்துக்காக காளியண்ணன் கோவில் அகற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த கோவிலில் வந்து வழிபடும் இருசமூகத்தினர் ரோட்டின் ஓரத்திலேயே சில அடிகள் தூரத்தில் கோவிலை மீண்டும் கட்ட முடிவு செய்தனர்.
அப்போது ஒரு சமூகத்தினர் பழைய சிலைகளை மட்டும் புதிதாக கட்டும் கோவிலில் வைக்க வேண்டும் என்றார்கள். மற்றொரு தரப்பினர் காளியண்ணனுக்கு புதிதாக சிலைகள் வைக்க வேண்டும் என்றனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பினரும் ஈரோடு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே கடந்த வாரம் ஒரு தரப்பினர் திடீரென ரோட்டு ஓரம் புதிய கோவில் கட்டி, காளியண்ணனுக்கு புதிய சிலை அமைத்தனர். முன்பக்கம் இரும்பு கம்பிகள் கொண்ட கதவும் போடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.45 மணி அளவில் ஹெல்மெட் அணிந்த 7 பேர் மோட்டார்சைக்கிளில் காளியண்ணன் கோவிலுக்கு வந்தார்கள். பின்னர் தாங்கள் கொண்டு வந்திருந்த கடப்பாரையால் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தார்கள்.
அதன்பின்னர் சம்மட்டி, கடப்பாரையில் காளியண்ணன் சிலையை அடித்து உடைத்தார்கள். சத்தம் கேட்டு கோவில் அருகே குடியிருப்பவர்கள் வெளியே வந்து பார்த்தார்கள். ஹெல்மெட் அணிந்தவர்கள் ஆயுதங்களை காட்டி அவர்களை மிரட்டினார்கள். இதனால் அவர்கள் பயந்துகொண்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார்கள்.
அதன்பின்னர் மர்ம நபர்கள் காளியண்ணன் சிலையை துண்டுதுண்டாக உடைத்துவிட்டு மோட்டார்சைக்கிளில் ஏறி சென்றுவிட்டார்கள். நேற்று காலை சிலை உடைக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், சிலை வைத்த தரப்பினர் சுமார் 400 பேர் கோவில் அருகே திரண்டுவிட்டார்கள்.
சிலைகளை உடைத்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கூறி சிவகிரி-கொடுமுடி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த வழியாக எந்த வாகனமும் செல்லமுடியவில்லை.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
இதற்கிடையே சிவகிரி, கொடுமுடி ரோடு பகுதி, தலையநல்லூர், தொப்பபாளையம், தாமரைபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் பாதுகாப்பு கருதி சிவகிரியில் அதிவிரைவுப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. சாமி சிலைகளை உடைத்தவர்களை கைது செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். இந்தநிலையில் முன்னாள் எம்.பி.செல்வக்குமார சின்னையன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் இளைஞரணி மாநில செயலாளர் சூரியமூர்த்தி ஆகியோர் போராட்டக்காரர்களிடம சென்று, சிலைகளை உடைத்தவர்களை போலீசார் விரைவில் கைது செய்துவிடுவார்கள் என்று சமாதானப்படுத்தினார்கள். அதன்பின்னரே சாலை மறியல் கைவிடப்பட்டது.
இந்த சிலை உடைப்பு சம்பவம் குறித்து, சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போட்டு பார்த்தனர். அப்போது ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் சம்மட்டியால் காளியண்ணன் சிலையை உடைப்பது பதிவாகியிருந்தது. இந்த காட்சிகளை வைத்து மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சாமி சிலைகள் உடைப்பு, சாலை மறியல், கடையடைப்பு, போலீஸ் குவிப்பு என்று சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி நேற்று பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story