சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் துப்புரவு பணியாளரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு சென்ற தாய் மாயம்


சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் துப்புரவு பணியாளரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு சென்ற தாய் மாயம்
x
தினத்தந்தி 22 Oct 2019 4:00 AM IST (Updated: 21 Oct 2019 11:36 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் துப்புரவு பணியாளரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு சென்ற தாய் மாயமானார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம், 

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று காலை 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குழந்தையுடன் வந்தார். பின்னர் அவர் அங்கிருந்த துப்புரவு பணியாளர் ஆவாரம் (வயது 60) என்பவரிடம், தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றும், மருத்துவமனையில் மாத்திரை இல்லாததால் அருகில் உள்ள மருந்து கடையில் வாங்கி வரும்படி டாக்டர் கூறியதாகவும், அதுவரை குழந்தையை பார்த்துக் கொள்ளும்படியும் கூறினார். இதை நம்பிய ஆவாரம் அந்த பெண் குழந்தையை வாங்கிக் கொண்டார்.

ஆனால் மருந்து கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறிய பெண், நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆவாரம், போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் விரைந்து வந்து, பிறந்து ஒரு மாதமே ஆன அந்த பெண் குழந்தையை மீட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் மருத்துவமனையில் குழந்தையை விட்டுவிட்டு, மாயமான தாய் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து மருத்துவமனை ஊழியர்களிடம் குழந்தையை போலீசார் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் குழந்தையை மருத்துவமனையில் விட்டுவிட்டு மாயமான தாய் யார்? பெண் குழந்தை என்பதால் துப்புரவு பணியாளரிடம் கொடுத்து விட்டு சென்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story