உடுமலையில் சாலையோரம் நிறுத்தி இருந்த கார் கண்ணாடியை உடைத்து பொருட்கள் திருட்டு


உடுமலையில் சாலையோரம் நிறுத்தி இருந்த கார் கண்ணாடியை உடைத்து பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 22 Oct 2019 4:30 AM IST (Updated: 22 Oct 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

உடுமலையில் சாலையோரம் நிறுத்தி இருந்த காரின் கண்ணாடியை மர்ம ஆசாமிகள் உடைத்து பொருட்களை திருடிச்சென்ற சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

உடுமலை,

உடுமலையில் தீபாவளி நெருங்கி வரும் நிலையில் பொதுமக்கள் தங்களது கார்களை சாலையோரம் நிறுத்தி விட்டு பொருட்களை வாங்குவதற்கு கடைகளுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி மாலை நேரத்தில் ஒருவர் குடும்பத்துடன் வந்து புத்தாடைகளை வாங்கி காரில் வைத்துவிட்டு, உடுமலை பைபாஸ் சாலையில் காரை நிறுத்திவிட்டு வேறு கடைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது காரின் பின்பக்க பக்கவாட்டுக் கதவின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே இருந்த புத்தாடைகளை காணவில்லை.

யாரோ மர்ம ஆசாமிகள் காரின் கண்ணாடியை உடைத்து புத்தாடைகளைத்திருடிச்சென்றிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பொறுத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்த்தபோது, அந்த திருட்டு சம்பவம் பதிவாகியிருந்தது. அதில் அந்த கார் நிறுத்தியிருந்த சாலையோரம் பல கார்கள் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த சாலையில் கார்கள், லாரிகள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

அங்கு காரின் பின்புறமாக 2 மர்ம ஆசாமிகள் நிற்கின்றனர். அப்போது அந்த 2 மர்ம ஆசாமிகள் காருக்குள் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதா? என்று கார் கண்ணாடி வழியாக நோட்டமிடுகின்றனர். அதில் ஒருவர் அவ்வப்போது மறைவிடத்தில் உட்கார்ந்து கொள்கிறார். 2 மர்ம ஆசாமிகள் அங்கும் இங்கும் நடந்து செல்வது போன்று, அந்த காருக்கு யாரும் வருகிறார்களா என்று நோட்டமிட்டு கொண்டு இருந்தனர்.

பின்னர் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த துணிப்பைகளை திருடிக்கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் எதுவும் செய்யப்படவில்லை.அதே சமயம் இந்த துணிகர திருட்டு சம்பவம் அங்குள்ள தனியார் நிறுவனத்தினர் வைத்துள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தீபாவளி நேரத்தில் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் இதுபோன்று சாலையோரங்களில்தான் காரை நிறுத்தி விட்டு நடந்து கடைகளுக்குச் சென்று வருகின்றனர். இந்த சம்பவத்தைத்தொடர்ந்து உடுமலை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள், ஏட்டு நல்லபெருமாள் உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் பொள்ளாச்சி சாலை,பை-பாஸ் சாலை, தாராபுரம் சாலை ஆகிய சாலைகள் சந்திக்கும் இடத்தில் போலீசார் கண்காணிப்பு கேமராவை வைத்துள்ளனர். அந்த கேமராவில் அந்தநேரத்தில் பதிவாகியுள்ள காட்சிகளையும்,கார் கண்ணாடியை உடைத்து திருடும் சம்பவம், தனியாருக்கு சொந்தமான கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஒப்பிட்டு பார்த்து விசாரித்து வருகின்றனர்.

உடுமலையில் கடந்த 3 நாட்களாக இதுபோன்ற தொடர் சம்பவங்கள் நடந்துள்ளன. கோவையைச்சேர்ந்த ஒருவர் தனது நண்பரைப்பார்ப்பதற்காக கடந்த 17-ந்தேதி உடுமலைக்கு காரில் வந்திருந்தார். அவர் தனது காரை பழைய பஸ் நிலையம் அருகே ஒரு கடைக்கு அருகில் நிறுத்தி விட்டு தனது நண்பரை சந்திக்க சென்றுவிட்டு திரும்பி வந்தார். அப்போது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. காருக்குள் இருந்த மடிக்கணினியை காணவில்லை. இதுகுறித்து அவர் உடுமலை குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

இந்த நிலையில் உடுமலை அனுஷம் நகரில் உள்ள கடையின் முன்பு சம்பவத்தன்று இரவு மடிக்கணினி இருந்துள்ளது. அதை யாராவது மறந்து வைத்து விட்டு சென்று இருப்பார்கள் என்று நினைத்த கடைக்காரர் அந்த மடிக்கணினியை எடுத்து கடைக்குள் வைத்திருந்தார். அது யாருடையது என்று தெரியாத நிலையில் மடிக்கணினியை இயக்கி பார்த்து அதிலுள்ள செல்போன் எண்ணுக்கு போன் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் கோவையில் இருந்து உடுமலைக்கு வந்து போலீசார் முன்னிலையில் மடிக்கணினியை பெற்றுச்சென்றார்.

உடுமலை அன்னபூரணி நகரைச் சேர்ந்த ஆவண எழுத்தர் ஒருவர் உடுமலை குட்டைத்திடலுக்கு வந்து காரை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன.உள்ளே வைத்திருந்த பையைக்காணவில்லை. அந்த பையில் சில ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த சம்பவம் குறித்து ஆவண எழுத்தர் உடுமலை போலீசிற்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து விசாரித்து வந்த நிலையில் அந்த பை ஒரு ஆட்டோவின் பின்பக்க இருக்கைக்கு பின்புறம் உள்ள இடத்தில் இருந்தது.

அந்த ஆட்டோ டிரைவர், ஆட்டோவை ஒரு ஓட்டல் அருகில் நிறுத்திவிட்டு ஓட்டலுக்கு சென்றிருந்த நேரத்தில் யாரோ அந்த பையை ஆட்டோவில் வைத்துவிட்டு சென்றுள்ளனர். அதை அந்த டிரைவர் போலீஸ் மூலம் உரியவரிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் கடந்த 19-ந்தேதி நடந்துள்ளது. உடுமலையில் இந்த 3 சம்பவங்களும் ஒரே மாதிரியாக நடந்துள்ளது. பொருட்களை காரில் வைத்து பூட்டி விட்டு சென்றிருந்த நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. அதனால் பாதுகாப்புபணிக்காக கூடுதல் போலீசாரை ரோந்து பணியில் அமர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story