பயிர் கடனை தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் மொட்டை அடித்து போராட்டம்


பயிர் கடனை தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் மொட்டை அடித்து போராட்டம்
x
தினத்தந்தி 22 Oct 2019 4:15 AM IST (Updated: 22 Oct 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

பயிர் கடனை தள்ளுபடி செய்யக்கோரி சென்னையில் விவசாயிகள் மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

பயிர் கடன் உள்ளிட்ட விவசாயிகளின் அனைத்து வகையான கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். தேசிய நதிகளை இணைக்க வேண்டும். 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு பென்சன் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நேற்று பாம்பு, எலிக்கறி சாப்பிடும் போராட்டம் நடத்துவதற்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் திட்டமிட்டு இருந்தது.

விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதையடுத்து தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நேற்று 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேல் சட்டை அணியாமல் அரை நிர்வாணத்துடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.

மழை பெய்ததால் பறக்கும் ரெயில் நிலைய மேம்பாலத்தின் கீழ் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது சில விவசாயிகள் பாதி மீசையையும், தலையில் பாதி மொட்டையும் அடித்துக்கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

போராட்டம் குறித்து அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறும்போது, ‘கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்கிறது. ஆனால் வாழ்வாதாரம் இழந்து தற்கொலைக்கு தள்ளப்படும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. ஐகோர்ட்டு உத்தரவிட்டும் பயிர் கடன்கள் இன்னும் தள்ளுபடி செய்யப்படாதது வேதனை அளிக்கிறது’ என்றார்.

பெண் விவசாயிகள் ஒப்பாரி வைத்து கோரிக்கையை வலியுறுத்தினர்.

Next Story