புதுவையில் மீண்டும் பரவும் டெங்கு காய்ச்சல் - 30-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதி


புதுவையில் மீண்டும் பரவும் டெங்கு காய்ச்சல் - 30-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 21 Oct 2019 10:30 PM GMT (Updated: 21 Oct 2019 8:33 PM GMT)

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. 30-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி, 

புதுவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வந்தது. இதனை கட்டுப்படுத்த புதுவை அரசு சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்தது. தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டத்தின் சார்பில் ஏடிஸ் கொசுக்கள், புழுக்களை கண்டறிந்து அழிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும், மழைநீரை தேங்க விடக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் புதுவையில் டெங்கு வேகமாக பரவி வருகிறது. காய்ச்சலுடன் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்ததில் 15 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. வானூர் அருகே உள்ள ஐவேலி கிராமத்தை சேர்ந்த அவர்கள் அங்குள்ள தனி வார்டில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே போல் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 15-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அரசு ஆஸ்பத்திரி அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, “புதுவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 15 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தீராத காய்ச்சலால் அரசுஆஸ்பத்திரிக்கு வருபவர்களுக்கு உடனடியாக ரத்த பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நாள்தோறும் 10-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் அரசு ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர். அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் வானூர் ஐவேலி கிராமத்தை சேர்ந்த செந்தில் (வயது35) மற்றும் ஒருவருக்கு டெங்கு இருப்பது தெரியவந்ததால் தனிவார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம். பொதுமக்கள் யாராவது தீராத காய்ச்சலால் அவதிப்பட்டால் அவர்கள் உடனடியாக அரசு பொது ஆஸ்பத்திரிக்கு வந்து ரத்த பரிசோதனை செய்து டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானால் சிகிச்சை பெற்று கொள்ளலாம்” என்றார்.

Next Story