காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் முடிவு: நாளை மறுநாள் மதியம் 1 மணிக்கு அறிவிக்கப்படும் - கலெக்டர் அருண் தகவல்


காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் முடிவு: நாளை மறுநாள் மதியம் 1 மணிக்கு அறிவிக்கப்படும் - கலெக்டர் அருண் தகவல்
x
தினத்தந்தி 21 Oct 2019 10:45 PM GMT (Updated: 21 Oct 2019 8:33 PM GMT)

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் முடிவு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மதியம் 1 மணிக்கு அறிவிக்கப்படும் என கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, 

புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அருண் காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் முடிந்தவுடன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் அசம்பாவிதங்கள் எதுவுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. இதில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை. லாஸ்பேட்டை பகுதியில் நடந்த சாலைமறியல் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஒரு கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. காமராஜ் நகர் தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவானது. நடந்து முடிந்துள்ள இடைத்தேர்தலில் 69.44 சதவீத வாக்குகளே பதிவானது. மழை காரணமாக வாக்குப்பதிவு குறைந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இருப்பினும் வாக்கு சதவீதம் குறைந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்படும்.

காமராஜ் நகர் தொகுதியில் 32 வாக்குச்சாவடிகளில் 32 வாக்குப்பதிவு எந்திரங்கள், 32 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 32 வி.வி.பாட் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. வாக்குப்பதிவின்போது எந்த எந்திரங்களிலும் கோளாறு ஏற்படாமல் சரியான முறையில் வாக்குப்பதிவு நடந்துள்ளது. வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கும். 3 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும். முதல் சுற்று முடிவு காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்படும். இறுதி முடிவு மதியம் 1 மணிக்குள் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புதுச்சேரி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா வழங்கியதாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

Next Story