நன்னடத்தை அடிப்படையில் கர்நாடகத்தில் 141 ஆயுள் கைதிகள் விடுதலை கன்னட ராஜ்யோத்சவா விழாவையொட்டி நடவடிக்கை


நன்னடத்தை அடிப்படையில் கர்நாடகத்தில் 141 ஆயுள் கைதிகள் விடுதலை கன்னட ராஜ்யோத்சவா விழாவையொட்டி நடவடிக்கை
x
தினத்தந்தி 22 Oct 2019 12:03 AM GMT (Updated: 22 Oct 2019 12:03 AM GMT)

கன்னட ராஜ்யோத்சவா விழாவையொட்டி நன்னடத்தை அடிப்படையில் நேற்று 141 கைதிகள் சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகியவற்றையொட்டி நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகள் சிறைகளில் இருந்து விடுதலை செய்யும் வழக்கம் உள்ளது. இந்த நிலையில், மொழிவாரி மாநிலமாக கர்நாடகம் உருவான நவம்பர் மாதம் 1-ந் தேதியை கன்னட ராஜ்யோத்சவா விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கர்நாடகத்தில் உள்ள மத்திய சிறைகளில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டது.

நன்னடத்தை அடிப்படையில் விடுதலையாக பெண் கைதி ஆயுள் தண்டனையில் 8 ஆண்டு காலத்தையும், ஆண் கைதி ஆயுள் தண்டனை காலத்தில் 10 ஆண்டுகளையும் நிறைவு செய்து இருக்க வேண்டியது அவசியமானதாகும். இதற்கான பட்டியல் சிறைத்துறை தயாரித்து மாநில அரசு வழியாக கவர்னர் வஜூபாய் வாலாவுக்கு அனுப்பி வைத்தது. இந்த பட்டியலை பரிசீலனை செய்த கவர்னர் வஜூபாய் வாலா நன்னடத்தை அடிப்படையில் 141 கைதிகளை விடுதலை செய்ய அனுமதி வழங்கினார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று பெங்களூரு உள்பட மாநிலத்தில் உள்ள 7 மத்திய சிறைகளில் இருந்து 141 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருந்து 71 கைதிகளும், மைசூரு சிறையில் இருந்து 23 கைதிகளும், பெலகாவி சிறையில் இருந்து ஒரு பெண் கைதி உள்பட 6 பேரும், கலபுரகி சிறையில் இருந்து 13 பேரும், விஜயாப்புரா சிறையில் இருந்து 6 பேரும், பல்லாரி சிறையில் இருந்து 11 பேரும், தார்வார் சிறையில் இருந்து 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

சிறையில் இருந்து வெளியே வந்த கைதிகளுக்கு நன்னடத்தை சான்றிதழ் வழங்கப்பட்டன. மேலும் அவர்களுக்கு ரோஜாப் பூக்கள் கொடுத்து சிறை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த கைதிகளை அவர்களின் குடும்பத்தினர் வரவேற்றனர். சிலர் கண்ணீர் மல்க சிறை வளாகத்திலேயே கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்தினர். இந்த சம்பவம் நேற்று பல்வேறு சிறை வளாகத்தில் நெகிழ்ச்சியான தருணமாக மாறியது.

Next Story