மராட்டிய சட்டசபை தேர்தல் வாக்களிக்க படையெடுத்த சினிமா நட்சத்திரங்கள் உடல் நலக்குறைவால் அமிதாப் பச்சன் ஓட்டுப்போடவில்லை


மராட்டிய சட்டசபை தேர்தல் வாக்களிக்க படையெடுத்த சினிமா நட்சத்திரங்கள் உடல் நலக்குறைவால் அமிதாப் பச்சன் ஓட்டுப்போடவில்லை
x
தினத்தந்தி 22 Oct 2019 12:37 AM GMT (Updated: 22 Oct 2019 12:37 AM GMT)

மராட்டிய சட்டசபை தேர்தலையொட்டி மும்பையில் சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் ஆர்வமாக வாக்களித்தனர். உடல் நலக்குறைவால் அமிதாப் பச்சன் ஓட்டுப்போடவில்லை.

மும்பை,

மும்பையில் உள்ள பாந்திரா, ஜூகு, கார், வெர்சோவா பகுதிகளில் அதிகளவில் இந்தி சினிமா நட்சத்திரங்கள் வசித்து வருகின்றனர். நேற்று மராட்டிய சட்டசபை தேர்தலையொட்டி அவர்கள் ஆர்வமாக வாக்குப்பதிவு மையங்களுக்கு வந்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

இதில், பாந்திரா மேற்கில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அமீர்கான் தனது மனைவி கிரணுடன் வந்து தனது ஓட்டை பதிவு செய்தார். வாக்களித்து விட்டு வெளியே வந்த அவர், ‘‘அனைவரும் வாக்களிக்க வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்தார்.

நடிகை வித்யா பாலன் கார் பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தாா். நடிகை ஐஸ்வர்யா ராய், கணவர் அபிஷேக் பச்சன், மாமியார் ஜெயா பச்சனுடன் வந்து ஜூகுவில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் ஓட்டுப்போட்டார்.

கல்லீரல் பாதிப்பு காரணமாக நடிகர் அமிதாப்பச்சன் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவர் ஓட்டுப்போட வரவில்லை.

பா.ஜனதா எம்.பி.யும், நடிகையுமான ஹேமமாலினி அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். நடிகைகள் தீபிகா படுகோனே, மாதுரி தீக்சித், சபானா ஆஸ்மி, பிரீத்தி ஜிந்தா, பழம்பெரும் நடிகர் பிரேம் சோப்ரா, இயக்குனரும், பாடல் ஆசிரியருமான குல்சார் ஆகியோரும் பாந்திரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

நடிகர் ஹிருத்திக் ரோசன் ஜூகு பகுதியில் ஓட்டுப்போட்டார். இதேபோல நடிகர் அனில் கபூர், வருண் தவான் ஜூகுவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

நடிகை ஜெனிலியா, கணவர் ரித்தேஸ் தேஷ்முக்குடன் லாத்தூரில் வாக்களித்தார். நடிகர் ஷாருக்கான் மதியம் 12 மணியளவில் பாந்திரா டான்போஸ்கோ பள்ளியில் மனைவி கவுரி கானுடன் வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். ஷாருக்கான் ஒட்டுப்போட வௌியே வருவார் என்பதை அறிந்து அவரது வீட்டின் முன் காலையிலேயே ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். அவா் வாக்களித்த சில மணி நேரங்களில் அதே பள்ளியில் நடிகர் சல்மான்கான் தனது வாக்கை செலுத்தினார்.

இதேபோல் நடிகைகள் ஜூகி சாவ்லா, ஊர்மிளா மடோங்கா், கரினா கபூர், ஷரத்தா கபூர், இஷா கோபிகர், நடிகர்கள் விவேக் ஒபராய், சாகித் கபூர், அர்ஜூன் கபூர், ரிஷி கபூர், பழம்பெரும் நடிகர்கள் தர்மேந்திரா, கோவிந்தா ஆகியோரும் ஆர்வமாக வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஓட்டுப்போட்டனர்.

பாந்திரா, வெர்சோவா உள்ளிட்ட இடங்களில் ஓட்டுப்போட படையெடுத்து வந்த சினிமா நட்சத்திரங்களை பார்க்க வாக்குப்பதிவு மையங்கள் அருகே ரசிகர்கள் கூடியிருந்தனர்.

இதேபோல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது மனைவி, மகனுடன் வந்து பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட்டார்.

டென்னிஸ் வீரர் மகேஷ்பூபதி, அவரது மனைவி லாரா தத்தாவுடனும், முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்பிளி தனது மனைவியுடன் மும்பையில் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

Next Story