கள்ளக்குறிச்சியில் டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த அரிசி ஆலை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்


கள்ளக்குறிச்சியில் டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த அரிசி ஆலை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 23 Oct 2019 4:15 AM IST (Updated: 22 Oct 2019 10:28 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதத்தை நகராட்சி ஆணையாளர் விதித்தார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி வட்டாரத்தில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவுகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையாளர் சையத் முஸ்தபா கமால் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் செல்வக்குமார் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் நேற்று நகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது டெங்கு கொசுக்கள் உருவாக கூடிய வகையில் தண்ணீர் தேங்கி நிற்கிறதா? தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுப்புழுக்கள் உள்ளனவா என்று அவர்கள் பார்வையிட்டனர்.

இதில் ஏமப்பேரில் இருந்து தென்கீரனூர் செல்லும் வழியில் உள்ள தனியார் அரிசி ஆலையில் ஆய்வு செய்த போது, அங்கு டெங்கு கொசு அதிக அளவில் உற்பத்தியாகியிருந்தது. இந்த கொசுவை மருந்து மூலம் துப்புரவு பணியாளர்கள் அழித்தனர். பின்னர் டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த அரிசி ஆலை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.

இதேபோல் சேலம் மெயின் ரோடு மணிக்கூண்டு பஸ் நிறுத்தம் அருகில் கட்டப்பட்டு வரும் வணிக வளாக கட்டிடத்தின் மேல்தளத்திலும், டெங்கு கொசு உற்பத்தியாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கட்டிட உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story