தூசி அருகே, போலீசார் துரத்திய போது பிரபல ரவுடி கிணற்றில் தவறி விழுந்து சாவு


தூசி அருகே, போலீசார் துரத்திய போது பிரபல ரவுடி கிணற்றில் தவறி விழுந்து சாவு
x
தினத்தந்தி 23 Oct 2019 4:30 AM IST (Updated: 22 Oct 2019 10:28 PM IST)
t-max-icont-min-icon

தூசி அருகே போலீசார் துரத்தி சென்ற போது மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தூசி, 

மதுரை சோலை அழகுபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி. அவருடைய மகன் பாட்டில் மணி (வயது 32), பிரபல ரவுடி. இவரது கூட்டாளி திருநெல்வேலி காழியூத்து கிராமத்தை சேர்ந்த குண்டு கார்த்திக் (35). இவர்கள் 2 பேரையும் சென்னை ரெட்ஹில்ஸ் போலீசார் கொலை, கொள்ளை, கஞ்சா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடி வந்தனர்.

நேற்று முன்தினம் சென்னை போலீசார் பாட்டில் மணி உள்ளிட்ட 10 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவர்கள் காரில் தூசி அருகே வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து தூசி போலீசார் உதவியுடன் அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது வடமாவந்தல் கிராமம் அருகே செல்லும் போது அவர்களை போலீசார் நெருங்கினர். இதனால் காரில் இருந்தவர்கள் இறங்கி தப்பி ஓடினர். அதில் குண்டு கார்த்திக் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். மற்றவர்கள் மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர்.

தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் வடமாவந்தல் கிராமத்தில் கன்னியப்பன் என்பவரது வயல்வெளி தரை கிணற்றில் பிணம் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அதில் இறந்து கிடந்தது பாட்டில் மணி என்பதும், போலீசார் துரத்தி வந்த போது கிணற்றில் தவறி விழுந்து இறந்து இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து காஞ்சீபுரம் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு கிணற்றில் இருந்து பாட்டில் மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக நமண்டி கிராம நிர்வாக அலுவலர் ஹரிதாஸ் கொடுத்த புகாரின் பேரில் தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story