வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே, கொட்டும் மழையில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. சங்க டாஸ்மாக் பணியாளர்கள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வேலூர்,
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் வேலூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு டாஸ்மாக் ஏ.ஐ.டி.யு.சி. சங்க மாநிலத்தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் திருமூர்த்தி, மாரிமுத்து, ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட பொருளாளர் ஜெயக்குமார் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் தனசேகர், மாநில பொருளாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரத்தை டாஸ்மாக் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும், புதுடெல்லி, கேரளாவை போன்று டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், மதுபாட்டில்களை கடையில் இறக்கும் போது உடையும் பாட்டில்களுக்கு இழப்பீடு தர வேண்டும், பணிமூப்பு அடிப்படையில் அரசின் பிறதுறைகளில் நிரந்தர பணி வழங்க வேண்டும், விற்பனை தொகையினை தினமும் வங்கிகளே வந்து கடைகளில் பெற்றுக்கொள்ள நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும், பணியாளர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையில் டாஸ்மாக் பணியாளர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாவட்ட செயலாளர்கள் இளங்கோவன், சாந்தகுமார், துணைத்தலைவர் அன்பரசு மற்றும் வேலூர், அரக்கோணம், திருப்பத்தூர் டாஸ்மாக் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சங்க நிர்வாகிகள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தாட்சாயிணியிடம் அளித்தனர்.
Related Tags :
Next Story