பள்ளிப்பட்டில் போலி டாக்டர் கைது


பள்ளிப்பட்டில் போலி டாக்டர் கைது
x
தினத்தந்தி 23 Oct 2019 3:00 AM IST (Updated: 22 Oct 2019 11:08 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே ஓமியோபதி படித்து விட்டு ஆங்கில மருத்துவம் அளித்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே சிறிய அளவில் மருத்துவமனை நடத்தி வந்தவர் பூபாலன் (வயது 45). இவர் பள்ளிப்பட்டு அருகே உள்ள திருமலைராஜூபேட்டை கிராமத்தை சேர்ந்தவர்.

இவர் ஓமியோபதி படித்து விட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிப்பதாக திருவள்ளூர் மாவட்ட சுகாதார அதிகாரிக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து பூந்தமல்லி முதன்மை மருத்துவ அலுவலர் தயாசாந்தி, பள்ளிப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் சிவா மற்றும் போலீசார் பூபாலன் நடத்தி வந்த மருத்துவமனையில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு பூபாலன் ஓமியோபதி படித்து விட்டு ஆங்கிலமுறை சிகிச்சை அளித்து வருவது தெரிந்தது. அங்கு இருந்த மருந்து, மாத்திரைகள், ஊசிகள் போன்றவற்றை அவர்கள் கைப்பற்றினார்கள்.

இதுகுறித்து மருத்துவ அதிகாரி தயாசாந்தி பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சிவா வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் பூபாலனை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Next Story