மாயனூரில் மழைநீர் தேங்கி குட்டையாக மாறிய சாலை


மாயனூரில் மழைநீர் தேங்கி குட்டையாக மாறிய சாலை
x
தினத்தந்தி 23 Oct 2019 3:45 AM IST (Updated: 22 Oct 2019 11:26 PM IST)
t-max-icont-min-icon

மாயனூரில் மழைநீர் தேங்கி குட்டையாக சாலை மாறியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

கிருஷ்ணராயபுரம், 

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை அடுத்த மாயனூர் சுற்றுலாதலமாக விளங்கி வருகிறது. இங்கு பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன், சிறுவர் பூங்கா, அம்மா பூங்கா ஆகியவை அமைந்துள்ளது. மேலும் காவிரியில் கரூர் - நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் வகையில் இருவழிச்சாலை வசதியுடன் கதவணை கட்டப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளிலிருந்து வெளியூர் சுற்றுலா பயணிகள் மற்றும் நாமக்கல், சேலம் செல்பவர்கள் இப்பகுதியை பயன்படுத்தி வருவதால் வளர்ந்து வரும் சுற்றுலா தலமாக மாயனூர் விளங்கி வருகிறது.

ஆனால் கதவணைக்கு செல்லும் பரிசல் துறை சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக மோசமாக காணப்படுகிறது. அதிகாரிகள் இந்த சாலையை கண்டுகொள்ளாததால், தற்போது மழைநீர் தேங்கி குட்டையாக மாறிவிட்டது. மழைபெய்யாத சமயங்களில் இந்த சாலை புழுதி பறக்கும் சாலையாக மாறிவிடும். மழை, வெயில் என எந்த சமயங்களிலும் வாகனங்களில் பயணிக்க முடியாத நிலை உள்ளது.

வெயில் காலங்களில் சாலையையொட்டி வசிக்கும் பொதுமக்கள் புழுதியால் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் மாயனூர் பரிசல் துறை சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் பரிசல் மற்றும் நீச்சல் போட்டி நடத்தப்படும், மேலும் தேங்கி நிற்கும் தண்ணீரில் உற்பத்தியாகும் டெங்கு கொசுவை ஒழிக்க மீன்கள் வளர்க்கப்படும் என பொதுமக்கள் பதாகை மூலம் அறிவிப்பு செய்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இனிமேலாவது மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து பரிசல் துறை சாலையை உடனடியாக செப்பனிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story