வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: தர்மபுரி மாவட்டத்தில் ரூ.300 கோடி பரிவர்த்தனை பாதிப்பு


வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: தர்மபுரி மாவட்டத்தில் ரூ.300 கோடி பரிவர்த்தனை பாதிப்பு
x
தினத்தந்தி 23 Oct 2019 4:15 AM IST (Updated: 22 Oct 2019 11:50 PM IST)
t-max-icont-min-icon

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் ரூ.300 கோடி மதிப்புள்ள பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

தர்மபுரி,

பொதுத்துறை வங்கிகளை இணைப்பதை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் வங்கி ஊழியர்கள் நேற்று நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு வங்கி ஊழியர் சங்கங்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றன. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் 167 கிளைகளில் பணிபுரியும் 2,250 ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலான வங்கிகள் நேற்று ஊழியர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டன. வங்கிகளுடன் இணைந்த ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணி பாதிக்கப்பட்டதால் ஏ.டி.எம். சேவைகளும் நேற்று கணிசமான அளவில் பாதிப்புக்குள்ளானது. இதனால் அவசர தேவைகளுக்கு ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் எடுக்க சென்ற வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக வங்கிகளில் பண பரிவர்த்தனை, காசோலைகள் பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஒருநாளில் ரூ.300 கோடி மதிப்பிலான வங்கி பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டதாக வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி தர்மபுரி மாவட்ட வங்கி ஊழியர் சங்க தலைவர் கலிபுல்லா தலைமையில் தர்மபுரியில் திரண்ட வங்கி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினார்கள். பொதுத்துறை வங்கிகளை இணைக்க கூடாது. வங்கிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். வங்கிகளில் உள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் சேவை கட்டணத்தை குறைக்க வேண்டும். பெரிய தொழிலதிபர்களில் பலர் வங்கிகளில் பெற்ற கடனை திருப்பி செலுத்தாமல் உள்ளதால் ஏற்பட்டுள்ள வாரா கடன்களை வசூலிக்க வேண்டும். பொதுமக்களின் வைப்பு நிதிக்கு அதிக வட்டி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Next Story