கர்நாடகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 12 நிவாரண முகாம்கள் திறப்பு கர்நாடக அரசு தகவல்
கர்நாடகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 12 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 12 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
வெள்ளப்பெருக்கு
கர்நாடகத்தில் குறிப்பாக வட கர்நாடகத்தில் கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணா உள்பட பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வட கர்நாடகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகளை மேற்கொள்ள 2 தேசிய இயற்கை பேரிடர் குழுக்கள் பெலகாவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு குழு கதக் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாநில அரசின் தீயணைப்பு மீட்பு குழுவினரும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
12 நிவாரண முகாம்கள்
வெள்ள பாதிப்புகளை தடுக்கும் பொருட்டு, அணைகளில் இருந்து நீர் வெளியேற்றுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் அரசு செயல்படுகிறது. மாவட்ட நிர்வாகங்கள் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. முதல்-மந்திரி, வருவாய்த்துறை மந்திரி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
மழையால் பாதிக்கப்பட்டுள்ள பெலகாவி, பாகல்கோட்டை, சிக்கமகளூரு, குடகு, ஹாவேரி, சித்ரதுர்கா, கதக், தார்வார் ஆகிய மாவட்டங்களில் 12 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2,176 பேர் தங்கவைக்கப்பட்டுள்ள னர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
45 கால்நடைகள்
கர்நாடகத்தில் கடந்த 2 நாட்களில் பெய்த மழைக்கு இதுவரை 12 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் பெலகாவியில் 2 பேர், கொப்பலில் 4 பேர், ராய்ச்சூர், பாகல்கோட்டை, தார்வார், மண்டியா ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர், ஹாவேரியில் 2 பேர் அடங்குவர். இவர்களில் 5 பேரின் உடல்கள் இன்னும் கிடைக்கவில்லை. 5,444 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 45 கால்நடைகள் செத்துள்ளன.
இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story