தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் சார்லிக்கு டாக்டர் பட்டம் - கவர்னர் பன்வாரிலால்புரோகித் வழங்கினார்
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் சார்லிக்கு டாக்டர் பட்டத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக 12-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். தமிழக கவர்னர் பன்வாரிலால்புரோகித் கலந்து கொண்டு மொரிசீயஸ் நாட்டு முன்னாள் அமைச்சரும், உலக திருக்குறள் மைய நிறுவனருமான ஆறுமுகம் பரசுராமன், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன், எழுத்தாளர் கல்யாணசுந்தரம் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார்.
மேலும் திரைப்பட சிரிப்பு நடிகர் சார்லி, தஞ்்சை அகத்தியர் மூலிகை உடலியக்க மருத்துவர் தட்சிணாமூர்த்தி, நர்சரி மற்றும் பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் ஸ்ரீதர் உள்பட 150 பேருக்கு டாக்டர் பட்டங்களை கவர்னர் வழங்கினார். விழாவில் முனைவர் பட்ட மாணவர்கள், ஆய்வியல் நிறைஞர் மாணவர்கள், கல்வியியல் நிறைஞர் மாணவர்கள், முதுநிலை பட்ட மாணவர்கள், இளங்கலை கல்வியியல் மாணவர்கள் மற்றும் தொலைநிலைக்கல்வி மாணவர்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 346 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவின் முதல் புத்தகமாக திருக்குறளை அங்கீகரிக்க வேண்டும் என்று கவர்னர் மூலமாக மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தியாவில் மொழிக்காக அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் தமிழ்ப்பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்துக்கு தற்போது பி பிளஸ் தரச்சான்று கிடைத்துள்ளது. இதனை மேலும் உயர்த்தி தமிழ்ப்பல்கலைக்கழகத்தை உலகத்தரத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியில் அனைவரும் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன் பட்டமளிப்பு உரையாற்றினார். முடிவில் பதிவாளர் (பொறுப்பு) சின்னப்பன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story