ஓய்வுபெறும் அரசு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்


ஓய்வுபெறும் அரசு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 22 Oct 2019 10:45 PM GMT (Updated: 22 Oct 2019 7:35 PM GMT)

பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ள அரசு அலுவலர்களுக்கான 3 நாட்கள் பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது. இதை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

சென்னை,

தமிழக அரசின் தலைமை பயிற்சி நிலையமான அண்ணா மேலாண்மை நிலையம் சார்பில் அரசு பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ள அரசு அலுவலர்களுக்கு, ‘பணி ஓய்வுக்காலம்-ஆலோசனைகள்’ என்ற தலைப்பில் 3 நாட்கள் பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி வகுப்பை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடங்கி வைத்து, ஓய்வுக்கால ஆலோசனை புத்தகத்தை வெளியிட்டார்.

அண்ணா மேலாண்மை நிலையத்தின் இயக்குனர் வெ.இறையன்பு, கூடுதல் இயக்குனர் எஸ்.ஷோபா, இணை இயக்குனர் எஸ்.ராஜேந்திரன், பயிற்சி மேலாளர் மு.சுந்தரராஜன், நிர்வாக அலுவலர் எம்.ஆர்.யுகேந்திரன், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர் டாக்டர் சீ.ஸ்வர்ணா உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசும்போது, ‘வெள்ளம், புயல், வறட்சி போன்ற இயற்கை பேரிடர் காலங்களிலும், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும்போதும், வன்முறை வெடிக்கும்போதும், தேர்தல் நடக்கும்போதும், கடிகாரத்தை கவனிக்காமல் கடமையாற்றுகிறவர்கள் அரசு பணியாளர்கள்’ என்றார்.

மேலும், அரசு பணியாளர்கள் தங்களின் பணிக்காலத்துக்கு பிறகுள்ள ஓய்வு காலத்தை பயனுள்ள வகையில் எவ்வாறு அமைத்துக்கொள்வது? பணப்பயன்களை பாதுகாப்பாக முதலீடு செய்வது எப்படி?, உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பேணுவது?, உணவு பழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.

பயிற்சியில் கலந்துகொண்ட அரசு பணியாளர்கள் கூறுகையில், “இவ்வகையான பயிற்சி வகுப்புகள், பணி ஓய்வுக்கு பின்னர் சந்திக்க உள்ள உடல் தொடர்பான உபாதைகளுக்கும், மன ரீதியிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், பல்வேறு சந்தேகங்களுக்கு விடை காணும் வகையிலும் அமைந்திருந்தது” என்று குறிப்பிட்டனர்.

Next Story