திருமானூரில் போலீஸ் நிலையம் எதிரே துணிகரம்: ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது


திருமானூரில் போலீஸ் நிலையம் எதிரே துணிகரம்: ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது
x
தினத்தந்தி 23 Oct 2019 4:45 AM IST (Updated: 23 Oct 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

திருமானூரில் போலீஸ் நிலையம் எதிரே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூரில் போலீஸ் நிலையம் எதிரே இந்தியன் வங்கியும், அதன் அருகே ஏ.டி.எம். மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏ.டி.எம். எந்திரம் இருக்கும் அறைக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து சேதப்படுத்தி அதில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க முயன்றார்.

அப்போது பணம் இருக்கும் பெட்டகத்தை அவரால் திறக்க முடியாததால் எந்திரத்திற்குள் இருந்த ரசீது சீட்டுகளை கிழித்தெறிந்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இதையடுத்து நேற்று காலை வங்கி அதிகாரிகள் வந்து பார்த்தபோது ஏ.டி.எம். எந்திரம் சேதப்படுத்தப்பட்டு இருப்பது தெரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அதனை சோதித்து பார்த்ததில் பணம் ஏதும் திருட்டு போகவில்லை. கொள்ளை முயற்சி மட்டும் நடந்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து வங்கியின் மேலாளர் திருமானூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். எந்திரம் இருந்த அறைக்குள் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளையடிக்க முயற்சி செய்த நபர் அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழகுளத்தூர் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் (வயது 44) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார் அடுத்த 4 மணி நேரத்திற்குள் முருகானந்தத்தை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story