ராயக்கோட்டை அருகே, தேங்காய் வியாபாரி வெட்டிக்கொலை
ராயக்கோட்டை அருகே தேங்காய் வியாபாரியை முகமூடி கொள்ளையர்கள் வெட்டிக்கொலை செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள எடவனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சாக்கப்பன் (வயது 64). தேங்காய் வியாபாரி. இவருடைய மனைவி பொன்னியம்மாள். இவர்களது மகன் வேணுகோபால், மருமகள் சிவரஞ்சனி. சாக்கப்பன், மனைவி மற்றும் தாயார் சூடம்மாள் ஆகியோருடன் வீட்டின் கீழ் தளத்தில் தங்கி வந்தார். மகன் வேணுகோபால் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மேல் தளத்தில் தங்கி இருந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சாக்கப்பன் வீட்டில் மனைவி மற்றும் தாயாருடன் டி.வி. பார்த்து கொண்டு இருந்தார். அப்போது முகமூடி அணிந்த 8 பேர் கும்பல் வீட்டின் பின்புறமாக, அரிவாள், கத்திகளுடன் உள்ளே புகுந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சாக்கப்பன், அவர்களிடம் நீங்கள் யார்? என்று கேட்டார்.
உடனே அந்த கும்பலை சேர்ந்த ஒருவன் சாக்கப்பனை தாக்கினான். இதில் நிலை குலைந்து விழுந்த அவரிடம் வீட்டில் நகை, பணம் எங்கு உள்ளது? என்று கேட்டு மிரட்டி அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அரிவாளால் வெட்டினர். இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு மேல் மாடியில் இருந்த சிவரஞ்சனி கீழே எட்டி பார்த்துள்ளார்.
அப்போது முகமூடி கும்பல் வீட்டுக்குள் புகுந்து இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் மாடி வீட்டை உள்புறமாக தாழ்போட்டு கொண்டு கணவர் வேணுகோபாலுக்கு தகவல் தெரிவிக்க முயன்றார். ஆனால் அவருடைய செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சிவரஞ்சனி உல்லட்டி கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அங்கிருந்து 50-க்கும் மேற்பட்டவர்கள் எடவனஅள்ளி கிராமத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது வழியில் மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் இருளர் இனத்தை சேர்ந்தவர்கள் என்பதும், பூசாரிகள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் அவர்கள் ராயக்கோட்டை போலீசில் ஒப்ப டைத்த னர்.
சிறிது நேரத்தில் வேணுகோபால் வீட்டுக்கு சென்றபோது அங்கிருந்த முகமூடி கும்பலை சேர்ந்தவர்கள் தப்பியோடி விட்டனர். பின்னர் அவர், ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த தந்தையை மீட்டு ஓசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது சாக்கப்பன் வழியிலேயே இறந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதில் வீட்டில் நகை ஏதும் கொள்ளையடிக்கப் படவில்லை என தெரியவந்தது. சாக்கப்பன் சீட்டு நடத்தி வந்துள்ளார்.
இதனால் சீட்டு பணம் கொடுப்பது தொடர்பான பிரச்சினையில் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வெறிச்செயலில் ஈடுபட்டார்களா? அல்லது நகை, பணம் கிடைக்காத ஆத்திரத்தில் அவரை வெட்டி கொன்றார்களா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story