நாகை பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்எச்சரிக்கை பணிகள் - மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு


நாகை பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்எச்சரிக்கை பணிகள் - மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
x
தினத்தந்தி 22 Oct 2019 10:30 PM GMT (Updated: 22 Oct 2019 7:43 PM GMT)

நாகை பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்எச்சரிக்கை பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனியநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்,

நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்எச்சரிக்கை பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வேளாண்மைத்துறை சிறப்பு செயலாளருமான முனி யநாதன் மற்றும் மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் ஆகியோர் பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்தனர். அப்போது நகராட்சிக்குட்பட்ட அக்கரைக்குளம் வடகரை, மார்க்கண்டேயர் தெரு, சட்டையப்பர் தெற்கு வீதி, சட்டையப்பர் மேல வீதி, திரவுபதியம்மன் சன்னதி வளாகம், புளியமரத்தடி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் ஆகிய பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்தியாகும் தேவையற்ற பொருட்கள் உள்ளதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து நாகை பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்எச்சரிக்கை பணிகளை பார்வையிட்டனர். அப்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனியநாதன் கூறியதாவது:-

கொசுக்கள் உற்பத்தியாகக்கூடிய பகுதிகளில், சுகாதார பணியாளர்களை கொண்டு தீவிர தூய்மை பணிகளை மேற்கொள்ள அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, பேரூராட்சி பகுதிக்கும் தனித்தனியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (நேற்று) நகராட்சிப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டபோது, டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையின்றி வைத்திருந்த 2 வீடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.500 அபராதமும், வாகன பழுது பார்க்கும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் கலெக்டர் ஆகியோர் தலைமையில் மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதைத்தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீரும் வழங்கப்பட்டது. இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரசாந்த்,துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) சண்முகசுந்தரம், நகராட்சி ஆணையர் ஏகராஜ், தாசில்தார் பிரான்சிஸ் உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story