வெள்ள நிவாரண பணிகளை சரியாக செய்யாத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயற்சி


வெள்ள நிவாரண பணிகளை சரியாக செய்யாத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயற்சி
x
தினத்தந்தி 24 Oct 2019 4:00 AM IST (Updated: 23 Oct 2019 10:45 PM IST)
t-max-icont-min-icon

வெள்ள நிவாரண பணிகளை சரியாக செய்யாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட இளைஞர் காங்கிரசார் முயன்றனர்.

பெங்களூரு, 

வெள்ள நிவாரண பணிகளை சரியாக செய்யாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட இளைஞர் காங்கிரசார் முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ் போராட்டம்

வடகர்நாடக மாவட்டங்கள், மழை வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் மழை வெள்ள நிவாரண பணிகளை மத்திய, மாநில அரசுகள் சரியாக மேற்கொள்ளவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்த நிலையில் வெள்ள நிவாரண பணிகளை சரியாக கையாளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

பெங்களூரு மவுரியா சர்க்கிளில் நேற்று இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தின்போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பினர். கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், செயல் தலைவர் ஈஸ்வர்கன்ட்ரே, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் உக்ரப்பா, காங்கிரஸ் எம்.எல்.ஏ. சவுமியா ரெட்டி உள்பட கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

எடியூரப்பாவை ஏற்றுக்கொள்ளவில்லை

இந்த போராட்டத்தில் தினேஷ் குண்டுராவ் பேசும்போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்து உள்ளதை கட்சி மேலிட தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கர்நாடகத்துக்கு மத்திய அரசு அதிகளவில் நிவாரணம் வழங்கவில்லை. நிவாரண பணிகளை மேற்கொள்வதில் மாநில அரசு முழுமையாக தோல்வி அடைந்துள்ளது. பிரதமர் மோடி வெளிநாட்டு பயணங்களில் தான் கவனம் செலுத்துகிறார். அவரை பிரதமர் என்று கூறிக்கொள்வதில் வெட்கமாக உள்ளது.

கர்நாடகம் மீண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இது கர்நாடக அரசுக்கு பெரும் சவாலானது. ஆனால் எடியூரப்பா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எடியூரப்பா 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக கூறினார். ஆனால் அவர் 2 கோடி வேலையை அழித்துள்ளார் என்று அனைவரும் கூறிவரும் நிலையில் அதுபற்றி மோடி கவலைப்படுவது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கைது

அதன்பிறகு இளைஞர் காங்கிரசை சேர்ந்தவர்கள் மவுரியா சர்க்கிளில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். இந்த வேளையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இருப்பினும் போலீசார் போராட்டக்காரர்களை மடக்கி கைது செய்தனர். முன்னதாக இரும்பு தடுப்பு வேலிகளை தாண்டி போராட்டக்காரர்கள் செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story