ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் புதிய சரித்திரம் உருவாகும் - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் புதிய சரித்திரம் உருவாகும் - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 24 Oct 2019 4:45 AM IST (Updated: 23 Oct 2019 10:54 PM IST)
t-max-icont-min-icon

ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் புதிய சரித்திரம் உருவாகும் என்று ஈரோட்டில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

ஈரோடு,

முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காந்தியின் 150-வது பிறந்தநாளை உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொண்டாடி வருகிறார்கள். பா.ஜ.க. சார்பில் காந்தி பிறந்தநாள் விழாவையொட்டி தமிழகம் முழுவதும் பாதயாத்திரை நடைபெற்று வருகின்றது. இதில் மது ஒழிப்பு, மரம் வளர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

சீன பட்டாசுகளை இந்தியாவில் விற்பனை செய்தாலோ அல்லது வாங்கினாலோ தண்டனைக்குரிய குற்றமாகும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மீண்டும் வளம் பெறுகிறது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாக விளங்கும் இடங்களில், அதன் கட்டிட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது பாராட்டுக்குரியது. ஆனால் கிராம ஊராட்சி முதல் மாநகராட்சி வரை அரசுக்கு சொந்தமான இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் மழைநீர் தேங்கி நிற்பதற்கு அரசு அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தை முரசொலி நிர்வாகம் கையகப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த இடத்தை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலக மொழிகளில் குறிப்பாக சமஸ்கிருதத்தை விட பழமையானது தமிழ் மொழி என்று பிரதமர் மோடி கூறிஉள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு கூட்டத்தை கூட்டி அனைத்து கட்சிகள் சார்பில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். நன்றி தெரிவிப்பது என்பது பிரதமர் மோடிக்கு பெருமை அல்ல. தமிழுக்கு கொடுக்கும் அங்கீகாரம் ஆகும்.

ரஜினிகாந்த் பா.ஜ.க.வுடன் சேர்ந்தாலோ, தனி கட்சியை தொடங்கினாலோ மற்ற கட்சிகள் அழிந்துவிடும். இதனால் அவரைப்பற்றி விமர்சிக்கிறார்கள். ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் புதிய அரசியல் சரித்திரம் உருவாகும் என்று நம்புகிறேன்.

புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதன் முடிவுகள் வந்த பிறகு தான் இறுதி முடிவு எடுக்கப்படும். காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி தமிழகத்தில் மது இல்லாத தீபாவளி கொண்டாடப்பட வேண்டும். ஒரு சொட்டு மதுகூட விற்கப்படவில்லை என்ற சரித்திரம் படைக்க வேண்டும். இதற்காக 26-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்.

தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்க குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி கோர்ட்டு அறிவித்துள்ளதால் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Next Story