தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சரக்கு ஏற்றிச்சென்ற தோணி நடுக்கடலில் மூழ்கியது 9 மாலுமிகள் பத்திரமாக மீட்பு


தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சரக்கு ஏற்றிச்சென்ற தோணி நடுக்கடலில் மூழ்கியது 9 மாலுமிகள் பத்திரமாக மீட்பு
x
தினத்தந்தி 24 Oct 2019 4:00 AM IST (Updated: 23 Oct 2019 11:46 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சரக்கு ஏற்றிச்சென்ற தோணி மூழ்கியதால், நடுக்கடலில் தத்தளித்த 9 மாலுமிகள் மீட்கப்பட்டனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சரக்கு ஏற்றிச்சென்ற தோணி மூழ்கியதால், நடுக்கடலில் தத்தளித்த 9 மாலுமிகள் மீட்கப்பட்டனர்.

தோணி

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு தோணி மூலம் காய்கறி, கட்டுமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடியை சேர்ந்த ‘ஆர்க் ஆப் காட்‘ என்ற தோணி காய்கறி, கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட 240 டன் சரக்குகளை ஏற்றிக் கொண்டு கடந்த 19-ந் தேதி தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டது.

இந்த தோணியில் தூத்துக்குடி பாத்திமாநகரை சேர்ந்த அய்யாத்தம்பி மகன் ஜெயேந்திரன் (வயது 45) என்பவர் மாஸ்டராக பணியாற்றினார். தூத்துக்குடி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த ஜோசப் லீனஸ் (50) பாத்திமாநகரை சேர்ந்த சுரேஷ் (42), ராஜேஷ் (32), செல்வம் (54), மைக்கேல் (40), ஜார்ஜ் ரோட்டை சேர்ந்த டேவிட்ராஜா (22), உல்ஸ்டன் (36), விக்லிஸ் (54) ஆகியோர் மாலுமிகளாக பணியாற்றினர்.

மர்மபொருள் மோதியது

தோணி, கடந்த 21-ந் தேதி அதிகாலை 3 மணி அளவில் கன்னியாகுமரியில் இருந்து 200 கடல் மைல் தொலைவிலும், மாலத்தீவில் இருந்து 116 கடல் மைல் தொலைவிலும் சென்று கொண்டு இருந்தது. அப்போது நடுக்கடலில் பலத்த காற்றுடன் மழை பெய்ததாக கூறப்படுகிறது. அங்கு கடல் கொந்தளிப்பாக இருந்தது. அந்த நேரத்தில் கடலில் மிதந்த ஒரு கருப்பு நிற மர்மபொருள் தோணி மீது மோதியது.

இதில் தோணியின் பக்கவாட்டில் சேதம் அடைந்தது. தோணிக்குள் தண்ணீர் வரத் தொடங்கியது. இதனால் தோணியில் இருந்த 9 பேரும் தவித்தனர். அப்போது மாலத்தீவில் இருந்து தூத்துக்குடிக்கு ஒரு சிறிய சரக்கு கப்பல் வந்தது. அந்த கப்பலை தொடர்பு கொண்டு உதவி கேட்டனர். தொடர்ந்து கப்பலில் இருந்தவர்கள் அந்த தோணியை பாதுகாப்பாக மாலுமிகளுடன் தூத்துக்குடி நோக்கி கொண்டு வந்தனர்.

தோணி மூழ்கியது

அவர்கள் கன்னியாகுமரியில் இருந்து சுமார் 100 கடல்மைல் தொலைவில் வந்தபோது தோணிக்குள் அதிக அளவில் தண்ணீர் புகுந்தது. இதனால் தோணியை தொடர்ந்து செலுத்த முடியாதநிலை ஏற்பட்டது. பின்னர் தோணி நடுக்கடலில் சரக்குகளுடன் மூழ்கியது. உடனடியாக படகில் இருந்த 9 மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் 9 பேரும் தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்களிடம் கடலோர பாதுகாப்பு படையினரும், குடியுரிமை அதிகாரிகள் மற்றும் போலீசாரும் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு 9 மாலுமிகளும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story