தாசில்தார் அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உள்ளிருப்பு போராட்டம்


தாசில்தார் அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 23 Oct 2019 10:45 PM GMT (Updated: 23 Oct 2019 6:24 PM GMT)

தேன்கனிக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேன்கனிக்கோட்டை, 

தேன்கனிக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாசில்தார் அவலுலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். விவசாய சங்கத்தின் மாநில துணைத்தலைவர் லகுமய்யா முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில துணைச்செயலாளர் வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.

போராட்டத்தின் போது தேன்கனிக்கோட்டை சுற்று பகுதிகளில் வீட்டுமனை பட்டா இல்லாத அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வீடுகட்ட 3 சென்ட் நிலம் வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக சாகுபடி செய்யும் விவசாய புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நிபந்தனையின்றி முதியோர் உதவித்தொகை வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை தாசில்தார் பாலசுந்தரம் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரிடமும் பட்டா குறித்த விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர்கள் பூதட்டியப்பா, நஞ்சப்பா, பழனி, நகர செயலாளர் சலாம்பேக், நாகராஜ், கெலமங்கலம் நகர செயலாளர் ஜெயராமன், மாதையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story