மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்: கணவன்-மனைவி பலி கும்பகோணம் அருகே பரிதாபம்


மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்: கணவன்-மனைவி பலி கும்பகோணம் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 24 Oct 2019 4:30 AM IST (Updated: 23 Oct 2019 11:59 PM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கணவன்-மனைவி பரிதாபமாக பலியானார்கள். இவர்களின் உறவுக்கார பெண் படுகாயம் அடைந்தார்.

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள வேப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர்(வயது 47). இவர், கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சித்ரா(40). நேற்று மதியம் சங்கர் அவருடைய மனைவி சித்ரா மற்றும் உறவுக்கார பெண் சசிகலா(30) ஆகியோர் ஆடுதுறையில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

அங்கு பணம் வாங்கிக்கொண்ட அவர்கள் பின்னர் அங்கிருந்து திருவிடைமருதூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். கோவிந்தபுரம் பகுதியில் அவர்கள் வந்தபோது எதிரில் சேலத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த அரசு பஸ், எதிர்பாராதவிதமாக சங்கர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

கணவன்-மனைவி பலி

இதில் சங்கரின் கால் துண்டாகி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். சங்கரின் மனைவி சித்ரா மற்றும் உறவினர் சசிகலா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் சித்ராவை மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சித்ரா பரிதாபமாக இறந்தார். சசிகலாவுக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவிடைமருதூர் போலீசார், சங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த சங்கர்-சித்ரா தம்பதியினருக்கு அரவிந்த், மணிகண்டன் ஆகிய 2 மகன்களும், அகிலா என்ற மகளும் உள்ளனர்.

விபத்தில் கணவன்-மனைவி பலியான சம்பவம் வேப்பத்தூர் பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Next Story