தூத்துக்குடியில், தீபாவளியையொட்டி ரூ.50 லட்சம் ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய இலக்கு தலைவர் என்.சின்னத்துரை தகவல்
தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.50 லட்சம் ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக, ஆவின் தலைவர் என்.சின்னத்துரை தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.50 லட்சம் ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக, ஆவின் தலைவர் என்.சின்னத்துரை தெரிவித்தார்.
சிறப்பு விற்பனை
தூத்துக்குடி மாவட்ட ஆவின் நிறுவனம் சார்பில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஆவின் பாலகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆவின் பாலகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 24 மணி நேரமும் செயல்படும் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா நேற்று காலை நடந்தது. விழாவுக்கு ஆவின் பொது மேலாளர் திரியேகராஜ் தங்கையா தலைமை தாங்கினார். தூத்துக்குடி கூட்டுறவு ஒன்றியங்களின் நிர்வாக இயக்குநர் அந்தோணி பட்டுராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை கலந்து கொண்டு சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இலக்கு
தூத்துக்குடி மாவட்ட ஆவின் நிறுவனம் பிரிக்கப்பட்ட போது 24 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது பால் கொள்முதல் 38 ஆயிரமாக உயர்ந்து உள்ளது. இதே போன்று விற்பனை 21 ஆயிரம் லிட்டரில் இருந்து 23 ஆயிரம் லிட்டராக அதிகரித்து உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் மூலம் 5 ஆயிரம் லிட்டர் நெய் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்திலுள்ள 185 முகவர்கள் மூலம் 3 ஆயிரத்து 750 லிட்டரும், 160 கூட்டுறவு சங்கங்கள் மூலம் 1250 லிட்டரும் நெய் விற்பனை செய்யப்பட உள்ளது. ஆவின் மூலம் இனிப்பு வகைகள், முறுக்கு, மிக்சர் உள்ளிட்ட கார வகைகள் ரூ.50 லட்சத்துக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மாநகராட்சி வளாகத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் ஆவின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் நெய், வெண்ணெய், பால்கோவா, நெய் அல்வா மைசூர்பா, மில்க்கேக், மில்க்சேக், பலசுவையுடன் நறுமணபால், பாதாம்பவுடர் மற்றும் பல சுவையுடன் ஐஸ்கீரிம்கள் உள்ளிட்ட அனைத்து வகையான இனிப்பு மற்றும் காரவகைகள் விற்பனை செய்யப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்ட மக்கள் அனைவரும் இந்த சிறப்பு ஆவின் விற்பனை நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் ஆவின் விரிவாக்க அலுவலர்கள் ஜெயபால், சாந்தா, ரேவதி, சுடலைமுத்து, செல்வின், பால்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story