திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேருக்கு பைபர் கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி தீவிரம்


திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேருக்கு பைபர் கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 23 Oct 2019 10:45 PM GMT (Updated: 23 Oct 2019 6:39 PM GMT)

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேருக்கு பைபர் கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது .

திருவாரூர்,

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோ‌‌ஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன்.

ஆழித்தேரை இரும்பு தகட்டினால் ஆன மேற்கூரை கொண்டு தேரை மூடுவது வழக்கம். இதனால் பிரமாண்டமான ஆழித்தேரின் அழகிய தோற்றத்தை அனைவரும் காண முடியாமல் போகிறது. இதனையடுத்து ஆழித்தேரை எந்த நேரத்திலும் அனைவரும் காணும் வகையில் பைபர் கண்ணாடி கூண்டு அமைக்க இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டது. இற்காக ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான பணிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது. இரும்பு தூண்களுடன் ஷெட்டு அமைக்கப்பட்டு பைபர் கண்ணாடி பொருத்தப்படாமல் இருந்தது. இந்தநிலையில் ஆழித்தேரோட்ட விழாவிற்காக பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு, தேர் இரும்பு ஷெட்டு பிரிக்கப்பட்டு தேரோட்டம் நடந்தது. இதனையடுத்து கமலாம்பாள் ஆடிப்பூர தேரோட்டதின் வசதிக்காக ஆழித்தேர் கூரை அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

கண்ணாடி கூண்டு அமைக்கும் பணிகள்

கடந்த ஆகஸ்டு மாதம் மீண்டும் தேருக்கு பைபர் கண்ணாடி கூண்டு அமைக்கும் பணிகள் தொடங்கியது. ஆனால் இரும்பு ஹெட்டுகள் அமைக்கப்பட்டு பைபர் கண்ணாடி கூண்டு அமைக்கப்படாமல் பணிகள் பாதியில் நின்றது. இந்நிலையில் கடந்த ஒரு வாரம் காலமாக பருவமழை பெய்து வருவதால் மழை சாரல் பட்டு தேர் பாதிக்கப்படும் சுழ்நிலை உள்ளதால் பக்தர்கள் வேதனையடைந்தனர்.

இந்த சுழ்நிலையில் நேற்று ஆழித்தேருக்கு பைபர் கண்ணாடி கூண்டு அமைக்கும் பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த பக்தர்கள் கூறுகையில், ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும். பிரதான சாலையில் தேர் இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

Next Story