திருவாரூர் தாய்-சேய் நல மருத்துவமனையில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஆய்வு


திருவாரூர் தாய்-சேய் நல மருத்துவமனையில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 24 Oct 2019 4:15 AM IST (Updated: 24 Oct 2019 12:14 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் தாய்-சேய் நல மருத்துவமனையில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன் ஆய்வு செய்தார்.

திருவாரூர்,

திருவாரூர் விஜயபுரம் தாய்-சேய் நல மருத்துவமனை கடந்த 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தை மருத்துவம் மட்டுமே பார்க்கப்பட்டு வந்தது. திருவாரூர் நகரில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட மருத்துவமனை மன்னார்குடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

திருவாரூர் தாலுகா பகுதியான தண்டலையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்ததால் திருவாரூர் நகரத்துக்குள் பொதுமக்கள் காய்ச்சல், தலைவலி போன்ற சிகிச்சை கூட பெற முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இதனால் திருவாரூர் நகரில் பகுதி நேர மருத்துவமனை தொடங்க வேண்டும். இல்லையெனில் திருவாரூர் விஜயபுரம் தாய்-சேய் நல மருத்துவமனையில் ஆண்களுக்கும் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆய்வு

இந்தநிலையில் திருவாரூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன் தாய்-சேய் நல மருத்துவமனையை நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், பொதுமக்களின் வசதிக்காக தாய்-சேய் மருத்துவமனையில் ஆண்களுக்கு தனியாக சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தனிப்பிரிவு இன்று (நேற்று) முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவமனையில் கூடுதலாக 4 டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். 10 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று திருவாரூர் விஜயபுரம் தாய்-சேய் நல மருத்துவமனையில் ஆண்களுக்கும் சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுத்ததற்கு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Next Story