கல்வராயன்மலையில் தொடர் மழை: பெரியார் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்


கல்வராயன்மலையில் தொடர் மழை: பெரியார் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
x
தினத்தந்தி 24 Oct 2019 3:15 AM IST (Updated: 24 Oct 2019 12:55 AM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகம்அடைந்துள்ளனர்.

கச்சிராயப்பாளையம், 

கள்ளக்குறிச்சியை அடுத்த கச்சிராயப்பாளையம் அருகே உள்ளது கல்வராயன்மலை. இங்கு பெரியார், மேகம், கவியம் என 10-க்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகள் உள்ளன. மேலும் கல்வராயன்மலை அடிவாரத்தில் 46 அடி கொள்ளளவு கொண்ட கோமுகி அணை உள்ளது. இந்த அணைக்கு கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழைநீர் மல்லிகைப்பாடி, கல்படை, பொட்டியம் ஆகிய ஆறுகளின் வழியாக வருகிறது.

இதில் பெரியார் நீர்வீழ்ச்சிக்கு சேராப்பட்டு, மொட்டையனூர், வேங்கோடு, சின்னாடு ஆகிய பகுதியில் பெய்யும் மழைநீர் வருகிறது. கடந்த சில நாட்களாக கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரியார் நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தற்போது நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதேபோல் மற்ற நீர்வீழ்ச்சியிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் இங்கு வந்து நீர்வீழ்ச்சிகளில் குளித்து உற்சாகமடைந்து வருகின்றனர். மேலும் வெள்ளிமலை கரியாலூர் சாலையில் உள்ள படகு குழாமில் சவாரி செய்தும் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

Next Story