வீரவநல்லூரில் டெங்கு தடுப்பு பணிகளை கலெக்டர் ஷில்பா ஆய்வு
வீரவநல்லூரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை கலெக்டர் ஷில்பா ஆய்வு செய்தார்.
சேரன்மாதேவி,
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணியை மாவட்ட கலெக்டர் ஷில்பா நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.
அப்போது கலெக்டர் ஷில்பா கூறியதாவது:-
பருவ மழை தொடங்கி விட்ட இந்த சூழலில் கொசு உற்பத்தி அதிகமாக இருக்கும். எனவே கொசுக்களால் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் கொசு உற்பத்தியாகும் நல்ல தண்ணீர் தொட்டிகள், உடைந்த தேங்காய் சிரட்டைகள், பழைய டயர்கள் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். காய்ச்சிய குடிநீரை பருக வேண்டும். நிலவேம்பு கசாயம், பப்பாளிச்சாறு உள்ளிட்ட தடுப்பு மருந்துகளை உட்கொள்ள வேண்டும். நெல்லை மாவட்டத்தில் கடந்த காலங்களை விட டெங்கு பாதிப்பு மிக குறைவாக உள்ளது. அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு டெங்கு பாதிப்பு இல்லாத சூழலை உருவாக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுடன் வரும் அனைத்து நோயாளிகளுக்கும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா, எலி காய்ச்சலா? என உறுதிப்படுத்த வேண்டும் என டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் கொசுப்புழு இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் குறைந்தபட்சமாக 10 படுக்கைகள் கொசு வலையுடன் கூடிய காய்ச்சல் பிரிவை தனியாக ஏற்படுத்த வேண்டும். அங்கு சேர்க்கப்படும் நோயாளிகளை 24 மணி நேரமும் டாக்டர்கள், செவிலியர்கள் கண்காணிக்க வேண்டும்.
நிலவேம்பு பொடி போதுமானதாக உள்ளதா? என சித்த மருத்துவ அலுவலரிடம், சுகாதார அலுவலர்கள் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது, வட்டார மருத்துவ அலுவலர் செல்வகுமார், டாக்டர் மாகி சேவியர், வட்டார மருத்துவ கண்காணிப்பாளர் ஜான் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story