திருச்சி சிறப்பு முகாமில் இருந்து தப்பிய நைஜீரிய வாலிபர் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டார்


திருச்சி சிறப்பு முகாமில் இருந்து தப்பிய நைஜீரிய வாலிபர் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டார்
x
தினத்தந்தி 25 Oct 2019 4:45 AM IST (Updated: 24 Oct 2019 10:03 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து தப்பிய நைஜீரிய வாலிபர் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டார்.

திருச்சி,

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு வெளிநாடுகளை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறப்பு முகாமில் இருந்த நைஜீரியாவை சேர்ந்த ஸ்டீவன்பால் அப்புச்சி (வயது 30) கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி முகாமில் இருந்த மரத்தின் மீது ஏறி சுவரை தாண்டி குதித்து தப்பி சென்றார்.

இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், டெல்லி ஆகிய இடங்களுக்கு சென்று அவரை தீவிரமாக தேடி வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த மாதம் 13-ந் தேதி அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டம் பாகல்கர்க் சவுக் என்ற இடத்தில் பதுங்கி இருந்த ஸ்டீவன்பால் அப்புச்சியை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவரை ரெயில் மூலம் திருச்சிக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். கோர்ட்டு உத்தரவுப்படி, அவரை சென்னைக்கு அழைத்து சென்று புழல் சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் ஸ்டீவன்பால் அப்புச்சியை அவரது சொந்த நாடான நைஜீரியாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அங்குள்ள தூதரகம் மூலம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அவரது உண்மையான பெயர் மதுபுச்சி ஸ்டான்லி என்பதும், ஆனால் அவர் ஸ்டீவன்பால் அப்புச்சி என்ற பொய்யான பெயரில் இந்தியாவில் தங்கி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை நைஜீரியாவுக்கு அனுப்புவதற்கான முறையான ஆவணங்களை பெற்று நேற்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் அவரது சொந்த நாடான நைஜீரியாவுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Next Story