மாசு ஏற்படுத்தும் பட்டாசு வகைகளை தவிர்த்து வண்ண ஒளி தீபங்களால் தீபாவளியை கொண்டாடுவோம் - கலெக்டர் வேண்டுகோள்


மாசு ஏற்படுத்தும் பட்டாசு வகைகளை தவிர்த்து வண்ண ஒளி தீபங்களால் தீபாவளியை கொண்டாடுவோம் - கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 25 Oct 2019 4:15 AM IST (Updated: 24 Oct 2019 10:22 PM IST)
t-max-icont-min-icon

ஒலி, காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசு வகைகளை தவிர்த்து வண்ண ஒளி தீபங்களால் தீபாவளியை கொண்டாடுவோம் என்று கலெக்டர் கந்தசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை,

தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஒலி மாசு மற்றும் புகையில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று திருவண்ணாமலையில் நடந்தது. ஊர்வலத்தை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடராஜன், மாவட்ட சுற்றுச்சுழல் பொறியாளர் விஸ்வநாதன், உதவி பொறியாளர் சுஹாசினி, மாவட்ட கல்வி அலுவலர் அருள்செல்வம், பள்ளிகள் துணை ஆய்வாளர் குமார், அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலம் அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் நிறைவடைந்தது.

முன்னதாக கலெக்டர் கூறியதாவது:-

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆண்டுதோறும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மற்றும் காற்று மாசு குறித்தும், விபத்தில்லா தீபாவளியினை கொண்டாடுவது குறித்தும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. பட்டாசு தயாரிப்பாளர்கள் பட்டாசுகளில் அடங்கியுள்ள வேதிப் பொருட்கள் மற்றும் ஒலி அளவின் விவரத்தினை பட்டாசு பேக்கிங் பெட்டியில் குறிப்பிட வேண்டும்.

பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் ஒலி அளவானது 4 மீட்டர் தூரத்தில் 125 டெசிபல் அல்லது 145 டெசிபலுக்கு அதிகமாக ஏற்படுத்தும் பட்டாசுகளை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. 125 டெசிபல் அளவிற்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. 125 டெசிபல் அளவிற்கு கீழ் ஒலி எழுப்பக் கூடிய பட்டாசுகளை மட்டுமே வாங்க வேண்டும். ஒலி மற்றும் காற்று மாசு குறைவாக வெளியிடும் பசுமை பட்டாசுகளை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் குடும்பத் திருவிழா. அதனால் மக்கள் அனைவரும் அவரவர் குடும்பம், நண்பர்கள் மற்றும் அண்டை அயலாருடன் பாதுகாப்பாகவும் ஒலி மற்றும் காற்று மாசற்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த தீபாவளியினைக் கொண்டாடவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது. ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசு வகைகளைத் தவிர்த்து வண்ண ஒளி தீபங்களால் தீபாவளியை அனைவரும் சிறப்பாக கொண்டாடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story