அதிகாரிகளால் மட்டும் முடியாது பொதுமக்கள் ஒத்துழைத்தால் தான் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும் - மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சு


அதிகாரிகளால் மட்டும் முடியாது பொதுமக்கள் ஒத்துழைத்தால் தான் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும் - மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சு
x
தினத்தந்தி 25 Oct 2019 3:45 AM IST (Updated: 24 Oct 2019 11:02 PM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சலை அதிகாரிகளால் மட்டும் தடுக்க முடியாது. பொதுமக்களும் ஒத்துழைத்தால்தான் அதனை ஒழிக்க முடியும் என பரமேஸ்வரமங்கலம் கிராமத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் பேசினார்.

அரக்கோணம், 

அரக்கோணம் அருகே பரமேஸ்வரமங்கலம் கிராமத்தில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடந்தது. இதில் மாங்காட்டுச்சேரி, பரமேஸ்வரமங்கலம், அரிகிலபாடி ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். முகாமிற்கு வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தாசில்தார் ஜெயக்குமார் வரவேற்றார். மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வேணுசேகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் பேபிஇந்திரா, மாவட்ட சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், சு.ரவி எம்.எல்.ஏ.ஆகியோர் 206 பயனாளிகளுக்கு 23 லட்சத்து 50 ஆயிரத்து 676 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் பேசுகையில், “தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில்தான் அதிக அளவாக அதாவது 2 லட்சத்து 66 பேர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மூலமாக 53 பெரிய ஏரிகளும், ஊரக வளர்ச்சி துறை சார்பில் 221 ஏரிகளும், 269 குளங்களும் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. அந்த பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. டெங்கு காய்ச்சலை தடுக்க அதிகாரிகள் மட்டும் நினைத்தால் முடியாது. பொதுமக்களும் ஒத்துழைத்தால்தான் முழுமையாக டெங்குவை ஒழிக்க முடியும்” என்றார்.

விழாவில் சு.ரவி எம்.எல்.ஏ பேசுகையில், “தமிழக அரசு டெங்குகாய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது. அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான மருந்து, மாத்திரைகள் உள்ளது. அரசு புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வருபவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.

விழாவில் நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.விஜயன், காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜி.பழனி, ஜெயலலிதா பேரவை செயலாளர் என்.சங்கர், வட்ட வழங்கல் அலுவலர் மதி, சமூக பாதுகாப்பு தாசில்தார் மதிவாணன் உள்பட கிராம நிர்வாக அலுவலர்கள் நெடுஞ்செழியன், பிரபு, கலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் மூர்த்தி நன்றி கூறினார்.

Next Story