சூரசம்ஹாரத்தையொட்டி ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி


சூரசம்ஹாரத்தையொட்டி ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 25 Oct 2019 4:00 AM IST (Updated: 24 Oct 2019 11:10 PM IST)
t-max-icont-min-icon

சூரசம்ஹாரத்தையொட்டி அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் பிரசித்தி பெற்ற ரெத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நவம்பர் 2-ந்தேதி கந்தசஷ்டி சூரசம்ஹார விழா வெகுவிமரிசையாக நடக்கிறது. இதையொட்டி, கோவிலில் நேற்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

முதலில், சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பின்னர் மலையடிவாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபம் முன்பு முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சூரசம்ஹாரம்

கந்தசஷ்டி சூரசம்ஹாரத்தையொட்டி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மலையில் இருந்து வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி அடிவாரத்திற்கு கொண்டு வரப்படுகிறார். அதன்பின்னர் 7 நாட்கள் விழா நடக்கிறது. 28-ந்தேதி (திங்கட்கிழமை) காலை விக்னேஷ்வரபூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் செய்யப்படுகிறது. மாலையில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டு மலையை சுற்றிலும் சுவாமியின் வீதிஉலா நடைபெறவுள்ளது.

தொடர்ந்து நவம்பர் 1-ந்தேதி வரை தினசரி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படவுள்ளது. 2-ந்தேதி மதியம் அன்னதானமும், மாலையில் முருகன் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும், இரவு முக்கிய நிகழ்ச்சியான கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவும் நடை பெறவுள்ளது. 3-ந்தேதி மகா அபிஷேகம் மற்றும் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அய்யர்மலை சூரசம்ஹார அறக்கட்டளையினர் மற்றும் ரெத்தினகிரீஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Next Story