கடலூரில் தோட்டக்கலை வளர்ச்சி முகமை விற்பனை மையம் - கலெக்டர் அன்புசெல்வன் திறந்து வைத்தார்


கடலூரில் தோட்டக்கலை வளர்ச்சி முகமை விற்பனை மையம் - கலெக்டர் அன்புசெல்வன் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 24 Oct 2019 10:15 PM GMT (Updated: 24 Oct 2019 6:15 PM GMT)

கடலூரில் தோட்டக்கலை வளர்ச்சி முகமை விற்பனை மையத்தை கலெக்டர் அன்புசெல்வன் திறந்து வைத்தார்.

கடலூர், 

கடலூர் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அலுவலகத்தில் தமிழக தோட்டக்கலை வளர்ச்சி முகமை விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை கலெக்டர் அன்புசெல்வன் திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து ஸ்பைஸ் கிட், அன்னாசி ஸ்குவாஷ் ஆகியவை பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

பின்னர் இது குறித்து கலெக்டர் அன்புசெல்வன் கூறியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு தோட்டக்கலை பண்ணைகளிலும் (64 எண்கள்) தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை விற்பனை மையம் தொடங்கப்பட உள்ளது. அதன் முதன்மையாக கடலூர் செம்மண்டலம் குண்டுசாலையில் உள்ள தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் தமிழக தோட்டக்கலை வளர்ச்சி முகமை விற்பனை மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனை மையத்தில் தோட்டக்கலை பயிர்களில் இருந்து பெறப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான ஜாம், ஜெல்லி, ஸ்க்வாஷ், ஜூஸ், சாஸ் மற்றும் ஊறுகாய் ஆகியவை கிடைக்கும். பொருட்களுக்கு முன்பதிவு ஒன்றும் இல்லை. வாடிக்கையாளர்கள் பொருட்களை அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

விரைவில் நெய்வேலி மற்றும் விருத்தாசலத்திலும் தமிழக தோட்டக்கலை வளர்ச்சி முகமை சார்பாக தோட்டக்கலை விற்பனை மையங்கள் தொடங்கப்பட உள்ளது. விற்பனை மையங்கள் மூலமாக தோட்டக்கலை விவசாயிகள், கூட்டுப் பண்ணைய திட்டம் உழவர் உற்பத்தியாளர் குழு, உழவர் ஆர்வலர் குழு, பெருநகர காய்கறி வளர்ச்சி தொகுப்பு திட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் தோட்டக்கலையை சேர்ந்த சிறுதொழில் செய்யும் வணிகர்களுக்கு அவர்களுடைய பொருட்களை சந்தைபடுத்துதல் சுலபமாகவும் மற்றும் லாபமாகவும் இருக்கும் என்றார். இதில் கடலூர் தோட்டக்கலை துணை இயக்குனர் ராஜாமணி, வேளாண்மை இணை இயக்குனர் முருகன், வேளாண்மை துணை இயக்குனர் பூங்கோதை, வேளாண்மை உதவி இயக்குனர் பூவராகன், தோட்டக்கலை உதவி இயக்குனர்கள், தோட்டக்கலை அலுவலர்கள், தோட்டக்கலை உதவி அலுவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story