ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டு வணிக ஒப்பந்தத்தை கண்டித்து உழவர் உழைப்பாளர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டு வணிக ஒப்பந்தத்தை கண்டித்து உழவர் உழைப்பாளர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Oct 2019 4:00 AM IST (Updated: 24 Oct 2019 11:45 PM IST)
t-max-icont-min-icon

ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டு வணிக ஒப்பந்தத்தை கண்டித்து உழவர் உழைப்பாளர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை,

ஆசிய-பசிபிக் மண்டலத்தில் பொருளாதார கூட்டு வணிக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து போடக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொருளாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

கோவை மாவட்ட தலைவர் எஸ்.சி.பாலசுப்பிரமணியன், மாநில செயலாளர் ஈஸ்வரன், திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் கு.செல்லமுத்து கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். பின்னர் கு.செல்லமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டு வணிக ஒப்பந்தம் நிறைவேறினால் ஜப்பான், சீனா, கொரியா, ஆஸ்திரேலியா உள்பட 16 நாடுகளில் உற்பத்தியாகும் அனைத்து பொருட்களும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும். இதனால் நமது நாட்டில் தயாரிக்கும் அனைத்து பொருட்களின் விலை வீழ்ச்சியடைந்து விடும். விவசாயிகள் பெரிதும் அவதியடையும் நிலை ஏற்பட்டுவிடும். எனவேதான் இந்த ஒப்பந்தத்தில் நமது நாடு கையெழுத்து போடக்கூடாது என்பதை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

கேரளா, கர்நாடகா உள்பட சில மாநிலங்களும் இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ஏற்கனவே விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு சரிவர விலை கிடைக்காமல் இருக்கும் நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகிவிட்டால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும். எனவே இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கண்டிப்பாக கையெழுத்து போடக்கூடாது. இதற்கு சில மத்திய மந்திரிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் அந்த கட்சியின் ஒன்றிய செயலாளர் பழனிசாமி, வெங்கடேசன், ஈஸ்வரன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story