திருச்சி நகைக்கடை கொள்ளை: முருகனின் போலீஸ் காவல் மேலும் 8 நாட்கள் நீட்டிப்பு பெங்களூரு கோர்ட்டு உத்தரவு
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முருகனின் போலீஸ் காவல் மேலும் 8 நாட்களுக்கு நீட்டிப்பு செய்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டது.
பெங்களூரு,
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முருகனின் போலீஸ் காவல் மேலும் 8 நாட்களுக்கு நீட்டிப்பு செய்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் முருகனிடம் பையப்பனஹள்ளி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
முருகனிடம் விசாரணை
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையின் சுவரை துளையிட்டு கடந்த 2-ந் தேதி முகமூடி அணிந்த மர்மநபர்கள் ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருச்சி போலீசார் தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேட தொடங்கினர்.
இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட தமிழ்நாடு திருவாரூர் மாவட்டம் சீராத்தோப்பை சேர்ந்த முருகன்(வயது 45) கடந்த 11-ந் தேதி பெங்களூரு மேயோ ஹாலில் உள்ள மெட்ரோ பாலிட்டன் 11-வது கூடுதல் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை பொம்மனஹள்ளி போலீசார் முதலில் 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணையின்போது முருகனிடம் இருந்து 11 கிலோ 317 கிராம் தங்க நகைகள், 541.57 கிராம் வைர நகைகள், 37.79 கிராம் பிளாட்டின நகைகள் ஆகியவை மீட்கப்பட்டன. அதன்பிறகு மீண்டும் கடந்த 16-ந் தேதி முருகனை பெங்களூரு கோர்ட்டில் பொம்மனஹள்ளி போலீசார் ஆஜர்படுத்தி மேலும் 8 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த சமயத்தில் போலீசார் முருகனை சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
மேலும் 8 நாட்கள் காவல் நீட்டிப்பு
இந்த நிலையில் முருகனின் போலீஸ் காவல் நேற்று முடிவடைந்தது. இதையடுத்து, பொம்மனஹள்ளி போலீசார் நேற்று பெங்களூரு மெட்ரோபாலிட்டன் 11-வது கூடுதல் கோர்ட்டில் முருகனை ஆஜர்படுத்தினர். இந்த வேளையில் பையப்பனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் முருகனிடம் விசாரணை நடத்த அனுமதிக்கும்படி பையப்பனஹள்ளி போலீசார் கோர்ட்டில் மனு மூலம் அனுமதி கேட்டனர்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பையப்பனஹள்ளி போலீசாருக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து பையப்பனஹள்ளி போலீசாரிடம் முருகன் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
Related Tags :
Next Story