திருவள்ளூர் அருகே ஆட்டோ மீது பஸ் மோதல்; 4 தொழிலாளர்கள் பலி


திருவள்ளூர் அருகே ஆட்டோ மீது பஸ் மோதல்; 4 தொழிலாளர்கள் பலி
x
தினத்தந்தி 24 Oct 2019 11:00 PM GMT (Updated: 24 Oct 2019 6:34 PM GMT)

திருவள்ளூர் அருகே ஆட்டோ மீது பஸ் மோதி 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவள்ளூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் சிவபுரம் கிராமத்தில் இருந்து நேற்று காலை விவசாய கூலித்தொழிலாளர்கள் 9 பேர் ஒரு ஆட்டோவில் திருவள்ளூர் அடுத்த தலக்காஞ்சேரியில் உள்ள ஒரு வயலில் நாற்று நடும் வேலைக்காக சென்று கொண்டு இருந்தனர். ஆட்டோவை சிவபுரத்தை சேர்ந்த பிரபு (வயது 34) என்பவர் ஓட்டி வந்தார்.

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் உள்ள சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் வந்தபோது எதிரே ஊத்துக்கோட்டையில் இருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனிக்கு ஆட்களை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்று திடீரென ஆட்டோ மீது நேருக்குநேர் பயங்கரமாக மோதியது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் ஆட்டோவின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது.

இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி ஆட்டோ டிரைவர் பிரபு, ஆட்டோவில் பயணம் செய்த தொழிலாளர்கள் சிவபுரத்தை சேர்ந்த கார்த்திக் (37), வேலு (38), அவரது சகோதரர் மணி (60), சங்கர்(45), ராஜேஷ் (34), தங்கராஜ் (36), துரை (50), தமிழரசன் (30), செந்தில்(35) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதில் சம்பவ இடத்திலேயே கார்த்திக், வேலு, மணி ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்த மற்ற தொழிலாளர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் என்ற தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.

காயம் அடைந்த மற்ற தொழிலாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் செந்தில் என்பவர் மட்டும் மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் பஸ்சில் பயணம் செய்தவர்கள் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

விபத்து குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Next Story