திருச்செந்தூர் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தபால் நிலைய ஊழியர் தவறி விழுந்து பலி
திருச்செந்தூர் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தபால் நிலைய பெண் ஊழியர் மழைக்கு குடையை விரித்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்து பலியானார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தபால் நிலைய பெண் ஊழியர் மழைக்கு குடையை விரித்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்து பலியானார்.
தபால் நிலைய ஊழியர்கள்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மகன் மாரிமுத்து (வயது 34). இவருடைய மனைவி மாரிசுந்தரி (30). இவர்களுக்கு 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது.
கணவன்-மனைவி 2 பேரும் ஏரல் அருகே மாரமங்கலம் தபால் நிலையத்தில் ஊழியர்களாக வேலை செய்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் தினமும் ஒரே மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.
மழையில் குடையை விரித்தபோது...
நேற்று காலையில் வழக்கம்போல் மாரிமுத்து தனது மோட்டார் சைக்கிளில் தன்னுடைய மனைவி மாரிசுந்தரியை அழைத்து கொண்டு வேலைக்கு புறப்பட்டு சென்றார். திருச்செந்தூரை அடுத்த பிலோமி நகர் அருகில் சென்றபோது, சாரல் மழை பெய்தது.
இதையடுத்து மழையில் நனையாமல் இருப்பதற்காக, மாரிசுந்தரி தனது கையில் வைத்திருந்த குடையை விரித்தார். அப்போது பலத்த காற்று வீசியதால், குடையானது எதிர் திசையில் மடங்கியவாறு பறந்தது. அந்த குடையை பிடிக்க முயன்ற மாரிசுந்தரி எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
போலீசார் விசாரணை
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே கணவரின் கண் எதிரிலேயே மாரிசுந்தரி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தபால் நிலைய பெண் ஊழியர் மழைக்கு குடையை விரித்ததால் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story