டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் ஒத்துழைக்க வேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தல்
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்துக்கு தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
தூத்துக்குடி,
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்துக்கு தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
ஆஸ்பத்திரிகளுக்கு சான்றிதழ்
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் பதிவு செய்த ஆஸ்பத்திரிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் அனைத்து அம்சங்களும் சரியாக இருந்த ஆஸ்பத்திரிகள் தேர்வு செய்யப்பட்டன. இந்த ஆஸ்பத்திரிகளுக்கு பதிவு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி 25 ஆஸ்பத்திரிகளுக்கான சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஒத்துழைப்பு
மாவட்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சுத்தம், சுகாதாரம் பேணப்பட வேண்டும். டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நமது மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு குறைவாக இருந்தாலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தனியார் ஆஸ்பத்திரிகள் காய்ச்சல் நோயாளிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
அவர்களது முகவரியை பதிவு செய்து டெங்கு அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவித்தால்தான் அவர்களது இருப்பிட பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மை பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குர் பரிதா செரின், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன் பாவலன், கண்காணிப்பாளர் கமலவாசன், துணை இயக்குனர்கள் போஸ்கோ ராஜா(கோவில்பட்டி), யமுனா(தொழுநோய்), பொன்இசக்கி (குடும்ப நலம்), சுந்தரலிங்கம்(காசநோய்) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story