வைகை அணை வனவியல் பயிற்சி கல்லூரியில் வனவர் தூக்குப்போட்டு தற்கொலை
வைகை அணை வனவியல் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்று வந்த வனவர், குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெறாததால் விரக்தியடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் வனவியல் பயிற்சி கல்லூரி செயல்படுகிறது. தமிழகம் முழுவதும் வனத்துறை சீருடை பணியாளர்கள் மூலம் தேர்வாகும் வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது இங்கு 250-க்கும் மேற்பட்ட வனவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மதுரை பொன்னகரத்தை சேர்ந்த காசிலிங்கம் மகன் விஜயநாராயணன் (வயது 32) என்பவர் கல்லூரி விடுதியில் தங்கி வனவர் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் இவர் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு எழுதியிருந்தார். இதில் இவர் தேர்ச்சி பெறவில்லை என தெரிகிறது. அதேநேரம் இவருடன் தங்கி பயிற்சி பெற்று வந்த நண்பர்கள் சிலர் குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் மனவிரக்தி அடைந்த விஜயநாராயணன் கல்லூரி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து வனவியல் பயிற்சி கல்லூரி நிர்வாகம் சார்பில் வைகை அணை போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் இறந்த விஜயநாராயணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வைகை அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story