“சிறிய ஜவுளி பூங்கா அமைக்க முதலீட்டாளர்களுக்கு ரூ.2 கோடி மானியம்” கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறிய ஜவுளி பூங்கா அமைக்க முதலீட்டாளர்களுக்கு ரூ.2½ கோடி வரை மானியம் வழங்கப்படுவதாக, கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறிய ஜவுளி பூங்கா அமைக்க முதலீட்டாளர்களுக்கு ரூ.2½ கோடி வரை மானியம் வழங்கப்படுவதாக, கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறிய ஜவுளி பூங்கா அமைப்பது தொடர்பாக, கைத்தறி மற்றும் துணிநூல்துறை சார்பாக, முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுடன் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்களை அமைக்கவும், அந்த சிறிய ஜவுளிப்பூங்காக்களில் உட்கட்டமைப்பிற்கான செலவின தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி, இதில் எது குறைவோ அதனை மாநில அரசு மானியமாக வழங்கும் என்று முதல்-அமைச்சர் சட்டபேரவையில் தெரிவித்து இருந்தார்.
ஒவ்வொரு சிறிய ஜவுளிப் பூங்காவும் ஒரு சிறப்பு நோக்க முகமையினை பதிவு செய்திருக்க வேண்டும். இவ்வாறு அமையஉள்ள ஜவுளிப்பூங்கா குறைந்த பட்சம் 3 தொழிற் கூடங்களுடன், குறைந்த பட்சமாக 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும். நிலமானது சிறப்பு நோக்க முகமை பெயரில் பதிவு செய்திருக்க வேண்டும். நிலம், தொழிற்சாலை கட்டிடம், எந்திரம் மற்றும் தளவாடங்களுக்கு செய்யப்படும் முதலீடானது உட்கட்டமைப்பு வசதிக்கு செலவிடப்படும் முதலீட்டை விட 2 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
பூங்காவின் பெயரில் தேசிய வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டிருக்க வேண்டும். சிறிய ஜவுளிப் பூங்கா அமைக்கஉள்ள முதலீட்டாளர்களுக்கு மானியம் 3 தவணைகளில் விடுவிக்கப்படும்.
ஜவுளி உற்பத்தி
மாவட்டத்தில் புதியம்புத்தூர் பகுதியில் ஜவுளி உற்பத்தி தொழில் அதிகமாக உள்ளது. திருப்பூர், ஈரோடு பகுதியை அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தி அதிக அளவில் உள்ளது. இதை மேம்படுத்திட இந்த திட்டம் சிறப்பாக இருக்கும். எனவே, மாவட்டத்தில் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், மகளிர் திட்டம், திட்ட அலுவலர் ரேவதி, கைத்தறி கட்டுப்பாடு அலுவலர் சின்னசாமி, கைத்தறி ஆய்வாளர்கள் துரைராஜ், பிரேமா, ராமலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story