கோவில்பட்டியில் விவசாயிகள் தலையில் முக்காடு அணிந்து போராட்டம் பயிர் காப்பீட்டுத்தொகை வழங்க கோரிக்கை


கோவில்பட்டியில் விவசாயிகள் தலையில் முக்காடு அணிந்து போராட்டம் பயிர் காப்பீட்டுத்தொகை வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 25 Oct 2019 3:30 AM IST (Updated: 25 Oct 2019 1:09 AM IST)
t-max-icont-min-icon

பயிர் காப்பீட்டுத்தொகை வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் விவசாயிகள் தலையில் முக்காடு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி, 

பயிர் காப்பீட்டுத்தொகை வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் விவசாயிகள் தலையில் முக்காடு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலையில் முக்காடு அணிந்து போராட்டம்

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் தேசிய விவசாயிகள் சங்க தலைவர் வக்கீல் ரங்கநாயகலு தலைமையில் விவசாயிகள் நேற்று தங்களது தலையில் சாக்குப்பையால் முக்காடு அணிந்தவாறு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரகுபதியிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அந்த மனுவில், கோவில்பட்டி கோட்டத்தில் கடந்த 2018-2019-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத்தொகை இன்னும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. தற்போது கோவில்பட்டி பகுதியில் பரவலாக மழை பெய்ததால், விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்வதற்கு அதிக வட்டிக்கு கடன் வாங்கும் அவலநிலை உள்ளது.

பயிர் காப்பீட்டுத்தொகை வழங்க...

கடந்த ஆண்டு மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலால் பெருமளவில் மகசூல் இழப்பு ஏற்பட்டது. எனவே அதனை முழுமையான இழப்பீடாக கணக்கிட்டு, விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த போராட்டத்தில் சங்க மாநில பொதுச்செயலாளர் பரமேசுவரன், இயற்கை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கருப்பசாமி, ஒன்றிய இளைஞர் அணி தலைவர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story