தென்னை மரங்களுக்கு பயிர் காப்பீட்டு திட்டம் - கலெக்டர் தகவல்
தென்னை விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்,
திருப்புல்லாணி வட்டாரத்தில் சுமார் 2800 எக்டரில் தென்னை பயிரிடப்பட்டு வருகிறது. தற்சமயம் தென்னை மரங்களுக்கு பயிர் காப்பீட்டு திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னை மரங்களை காப்பீடு செய்வதன் மூலமாக வெள்ளம், புயல், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களினாலும், நில அதிர்வு, ஆழிப்பேரலை மற்றும் பூச்சி தாக்குதலினாலும் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டால் இழப்பீட்டு தொகை காப்பீட்டு நிறுவனம் மூலமாக வழங்கப்படும். ஆனால் திருட்டு மற்றும் வேண்டுமென்றே பராமரிக்கப்படாமல் விடப்படும் தோட்டங்கள், மனிதன் மற்றும் மிருகங்களினால் ஏற்படும் அழிவு, நோய்வாய்ப்பட்ட கன்றுகள் போன்ற இழப்புகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப் படாது.
தென்னை மரங்களை காப்பீடு செய்வதற்கு விவசாயிகள் தனிப்பயிராகவோ, ஊடுபயிராகவோ, வரப்பில் வரிசையாகவோ, வீட்டுத்தோட்டத்திலோ குறைந்தபட்சம் பலன் தரக்கூடிய 5 மரங்களாவது சாகுபடி செய்திருக்க வேண்டும். வளமான, ஆண்டுக்கு 30 காய்களுக்கு மேல் மகசூல் தரக்கூடிய மரங்களை மட்டும் இந்த திட்டத்தில் சேர்க்கலாம். ஒரு எக்டருக்கு அதிகபட்சம் 175 மரங்கள் மட்டுமே காப்பீடு செய்யமுடியும். தென்னை காப்பீடு செய்த விவசாயிகள், காப்பீடு செய்த தென்னை மரங்களை வண்ணம் பூசி 1,2,3, என எண்கள் குறிக்கவேண்டும்.
இத்திட்டத்தில் சேர விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள மரங்களின் எண்ணிக்கை, வயது, பராமரிப்பு முறை மற்றும் தற்போதைய நிலை பற்றிய சுய உறுதிமுன்மொழிவு அளிக்கவேண்டும். காப்பீடு செய்துள்ள காலத்தில் காப்பீடு நிறுவனம் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம். விவசாயிகள் தவறான உள்நோக்கம் கொண்டு உண்மைக்கு புறம்பான தகவல்கள் அளித்து இருந்தால் காப்பீடு நிராகரிக்கப்படும். தென்னை விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்புகொண்டு படிவத்தினை பூர்த்தி செய்து அளிக்கவேண்டும். மேலும் எண்கள் குறிக்கப்பட்ட மரங்களின் புகைப்படத்தை அளிக்கவேண்டும்.
இந்த ஆண்டில் எந்த தேதியில் காப்பீடு செலுத்தப்படுகிறதோ அதற்கு அடுத்த மாதம் 1-ந்தேதியில் இருந்து ஒரு வருட காலத்திற்கு பாலிசி வழங்கப்படும்.
விவசாயிகள் இழப்பீடு கோரிக்கை மனுவை பாதிக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் வேளாண் காப்பீட்டு நிறுவனத்திற்கு தெரிவிக்கவேண்டும். பாலிசி காலத்தில் மரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டால் இழப்பீடு வழங்கப்படும். ஏற்கனவே பாதிக்கப்பட்ட மரங்கள் காப்பீடு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது காப்பீடு செய்யப்பட்ட மரங்கள் வேண்டுமென்றே பராமரிக்கப்படாமல் இருந்தாலோ இழப்பீடு வழங்கப்படமாட்டாது. பாதிக்கப்பட்ட மரங்களை வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் தென்னை வளர்ச்சி வாரிய அலுவலர்கள் கொண்ட குழு ஆய்வு செய்து இழப்பீடு வழங்கப்படும். எனவே தென்னை விவசாயிகள் அனைவரும் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story