‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் “நடிகர் விஜய்யின் பேச்சுக்கு தமிழக அரசு பழிவாங்குகிறது” சீமான் குற்றச்சாட்டு


‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் “நடிகர் விஜய்யின் பேச்சுக்கு தமிழக அரசு பழிவாங்குகிறது” சீமான் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 25 Oct 2019 3:45 AM IST (Updated: 25 Oct 2019 1:25 AM IST)
t-max-icont-min-icon

“பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் பேச்சுக்கு தமிழக அரசு பழிவாங்குகிறது“ என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

தூத்துக்குடி, 

“பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் பேச்சுக்கு தமிழக அரசு பழிவாங்குகிறது“ என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

அரசு பழிவாங்குகிறது

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.

அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர் விஜய் ‘பிகில்‘ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியதற்கு வன்மம் வைத்துக் கொண்டுதான் தமிழக அரசு பழிவாங்குகிறது. விஜய் பேசிய கருத்துக்கு எதிர் கருத்துக்களை பலரும் தெரிவித்து விட்டார்கள். அதன் பின்னரும் பழிவாங்கும் நோக்கத்தோடு படத்துக்கு இடையூறு செய்வது நன்றாக இருக்காது. இதனால் இன்றைய தலைமுறையினருக்கு ஜனநாயகத்தின் மீது வெறுப்பு உண்டாகி விடும்.

செல்வாக்கு பெற்ற கலைஞர்கள் சொல்வது சமூகத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் அதிகார வர்க்கத்தினர், அவர்களுக்கு எதிராக எதிர்வினையாற்றுகிறார்கள், அச்சுறுத்த பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் நடிகர் விஜய் அஞ்சக்கூடாது.

கட்டுப்பாடு

போலீஸ் நிலையத்தில் என் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு உள்ளது அதிகாரத்தின் வலிமை. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, கவனமாக பேசியிருக்க வேண்டும். மதம் என்பது மாறிக் கொள்ள கூடியது. ஆனால், இனம் என்பது மாறமுடியாது. அமைச்சர் என்பவரும் கண்ணியத்தோடும், கட்டுப்பாடோடும் பேசவேண்டும்.

கோதுமை, பார்லி உள்ளிட்ட பொருளுக்கு அகவிலை உயர்த்தப்படுகிறது. வரிவிதிப்பு, நாட்டை குட்டிச் சுவராக்கி விட்டது. வரி விதிப்புக்கு எதிராக நாங்கள் போராடியபோது தேசத்துரோகி என்று கூறினார்கள். வாங்கும் திறனற்ற மக்களாக நம்மை மாற்றி விட்டார்கள். பண்டிகை நாட்களில் 200 சதவீதம் விற்பனையான இடத்தில் தற்போது 80 சதவீதம்தான் பொருட்கள் விற்பனையாகிறது. அடித்தட்டில் உள்ள 60 சதவீதம் மக்களை பற்றி ஆட்சியாளர்கள் கவலைப்படுவதில்லை. பெரும் முதலாளிகளின் நலன் கருதியே இவர்கள் செயல்படுவார்கள்.

தொடர் தாக்குதல்

ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது களையப்பட வேண்டும். மனிதர்கள் எல்லோரும் சமமென்பது கல்வியில் இருந்தே நாம் கற்பித்து வர வேண்டும். அதை நோக்கி அரசு செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story