கடையம் அருகே வாகைக்குளம் வரும் பறவைகளை பாதுகாக்க ‘வெடியில்லா தீபாவளி’ விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணி
கடையம் அருகே வாகைக்குளம் வரும் பறவைகளை பாதுகாக்க ‘வெடியில்லா தீபாவளி’ கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தப்பட்டது.
கடையம்,
கடையம் அருகே வாகைக்குளம் வரும் பறவைகளை பாதுகாக்க ‘வெடியில்லா தீபாவளி’ கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தப்பட்டது.
வாகைக்குளம்
நெல்லை மாவட்டம் கடையம் அருகே ஆழ்வார்குறிச்சி அடுத்து உள்ளது வாகைக்குளம். இந்த குளத்துக்கு இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பறவைகள் வந்து செல்கின்றன. நெல்லை மாவட்டத்தில் கூந்தன்குளத்துக்கு அடுத்தபடியாக வாகைக்குளத்துக்குத்தான் அதிக பறவைகள் வருகின்றன.
எனவே, இந்த குளத்துக்கு அருகே உள்ள நாணல்குள கிராமமக்கள் பறவைகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க வெடி வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகிறார்கள். இதன் காரணமாக இந்த குளத்துக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
விழிப்புணர்வு பேரணி
இந்த நிலையில் வாகைக்குளத்துக்கு வரும் பறவைகளை பாதுகாக்கும் வகையில் ‘வெடியில்லா தீபாவளி’ கொண்டாட வலியுறுத்தி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், ஆழ்வார்குறிச்சி சுற்றுச்சூழல் ஒப்புயர்வு மையம் மற்றும் மணிமுத்தாறு, அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வளக்காப்பு மையம் ஆகியவை சார்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று முன்தினம் நடைபெற்றது.
கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகையா தலைமை தாங்கி விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். சுற்றுச்சூழல் விஞ்ஞானி விஜயலட்சுமி, சுற்றுச்சூழல் மையத்தலைவர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்கள் பேரணியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பொம்மலாட்டம்
இதையடுத்து மாணவர்கள் கலைச்செல்வன், ராமச்சந்திரன் ஆகியோரின் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் செந்தில்நாதன், சொர்ணம், சிவகவிநேசன், ஏட்ரி நிறுவன மூத்த விஞ்ஞானி கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story