தாராபுரத்தில் டெங்கு ஒழிப்பு பணி: வீடு, வீடாக சென்று சப்-கலெக்டர் ஆய்வு
தாராபுரத்தில் டெங்கு ஒழிப்பு பணி தொடர்பாக வீடு, வீடாக சென்று சப்-கலெக்டர் பவன்குமார் ஆய்வு நடத்தினார்.
தாராபுரம்,
தாராபுரம் நகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த டெங்கு ஒழிப்பு பணி 23-வது வார்டில் நடைபெற்றது. இந்த பணி சப்-கலெக்டர் பவன்குமார் மேற்பார்வையில் நகராட்சி ஆணையர் லட்சுமணன், நகர்நல அலுவலர் டாக்டர் லட்சுமிநாராயணன், டாக்டர் கணேஷ்குமார், துப்புரவு ஆய்வாளர்கள் ராஜ்மோகன், அருண்பிரபாகர், சங்கர். தர்மராஜ் உள்பட பலர் மேற்கொண்டனர். டெங்கு ஒழிப்பு பணியில் 23-வது வார்டுக்கு உட்பட்ட பெரியகாளியம்மன் கோவில் தெரு, பாரதியார்தெரு, பீமராயர் மெயின்வீதி, வெள்ளையப்பாநகர், கிழக்கு பெரியார் தெரு உள்ளிட்ட பகுதிகளில், 100-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களை கொண்டு, துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
கழிவுநீர் சாக்கடைகள் தூர்வாரப்பட்டன. வீடுகளில் சேமித்து வைத்துள்ள தண்ணீரில் டெங்கு கொசு புழுக்கள் உள்ளனவா? என்று ஆய்வு செய்யப்பட்டது. தண்ணீர் தொட்டிகள் உள்ள இடங்களில் புழுக்களை ஒழிக்கும் மருந்துகள் தண்ணீரில் தெளிக்கப்பட்டது. இதுதவிர கொசுக்களை விரட்டுவதற்காக அனைத்து இடங்களிலும், எந்திரங்களை கொண்டு மருந்து கலந்த புகை அடிக்கப்பட்டது.
மேலும் டெங்கு காய்ச்சலை கண்டறிவதற்காக பெரியகாளியம்மன் கோவில் மண்டபத்தில், சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. முகாமில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசோதனையும், சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
டெங்கு ஒழிப்பு பணிகளையும், மருத்துவ முகாமையும் சப்-கலெக்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். ஆய்வின்போது மருத்துவ முகாமில் கலந்து கெண்டவர்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினார்.
பின்னர் அவர் ஒவ்வொரு வீடு, வீடாக சென்று, சுகாதாரம் பற்றியும், நகராட்சியின் துப்புரவு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அருகே இருந்த அங்கன்வாடி மையங்களுக்குச் சென்று, அங்குள்ள குழந்தைகளின் நலன் குறித்து விசாரித்தார்.
குழந்தைகளுக்கு காய்ச்சல் நோய் ஏற்பட்டால், உடனே நகராட்சிக்கு தகவல் கொடுக்கும்படி மையப் பொறுப்பாளர்களை கேட்டுக் கொண்டார். டெங்கு குறித்த விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை, பொதுமக்களுக்கு வழங்கினார்.
Related Tags :
Next Story