நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்


நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்
x
தினத்தந்தி 25 Oct 2019 3:45 AM IST (Updated: 25 Oct 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

நெல்லை, 

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

அ.தி.மு.க. வெற்றி

நாங்குநேரி சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றி பெற்றார். இதையடுத்து அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். நெல்லை வண்ணார்பேட்டையில் மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் இனிப்புகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் விஜிலா சத்யானந்த் எம்.பி., அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், நெல்லை மாநகர் மாவட்ட அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, நெல்லை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, ஆர்.பி.ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாளையங்கோட்டை சேவியர் காலனியில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திரளான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

இதேபோல் பாளையங்கோட்டை ஒன்றியம் புதுக்குளத்தில் பாளையங்கோட்டை ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

வாசுதேவநல்லூர், சிவகிரி, ராயகிரி, விஸ்வநாதபேரி, நாரணபுரம், திருமலாபுரம், நெற்கட்டும்செவல் ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். இதில் மனோகரன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் மூர்த்திப்பாண்டியன், இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் சீமான் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவிலில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தென்காசி பழைய பஸ் நிலையம் முன்பு நகர அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். அம்பையில் நகர அ.தி.மு.க. சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கப்பட்டது. சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகே நகர அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் பழனிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அச்சன்புதூரில் டாக்டர் சுசீகரன் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.

ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு அ.தி.மு.க. அலுவலகத்தில் வைத்து நெல்லை புறநகர் மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் காபிரியேல் ஜெபராஜன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

Next Story