எங்கள் பணியை அங்கீகரித்து இடைத்தேர்தலில் மக்கள் வெற்றியை தந்துள்ளனர் - நாராயணசாமி பெருமிதம்


எங்கள் பணியை அங்கீகரித்து இடைத்தேர்தலில் மக்கள் வெற்றியை தந்துள்ளனர் - நாராயணசாமி பெருமிதம்
x
தினத்தந்தி 25 Oct 2019 4:45 AM IST (Updated: 25 Oct 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

எங்கள் பணியை அங்கீகரித்து இடைத்தேர்தலில் மக்கள் வெற்றியை தந்துள்ளனர் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி பெருமிதத்துடன் கூறினார்.

புதுச்சேரி, 

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதையொட்டி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயம் மற்றும் வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த வெற்றி குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

காமராஜ் நகர் தொகுதியில் தற்போதைய எம்.பி. வைத்திலிங்கம் 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இடைத்தேர்தலை சந்தித்தோம். நகரப்பகுதியில் உள்ள மக்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கிறார்கள்.

வைத்திலிங்கம் எம்.எல்.ஏ.வாக இருந்த காலத்தில் நிறைய மேம்பாட்டு பணிகளை செய்துள்ளார். அவரது பணியை மக்கள் அங்கீகரித்து உள்ளனர். மக்கள் எங்கள் ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த ஆட்சியையும் அங்கீகரித்து உள்ளனர்.

கவர்னர் கிரண்பெடி தொடர்ந்து எங்கள் அரசுக்கு தொல்லை கொடுத்து வருகிறார். மக்கள்நல திட்டங்களை தடுத்து நிறுத்தி வருகிறார். மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறார் என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.

இதற்காகத்தான் அமோக வெற்றியை எங்களுக்கு கொடுத்துள்ளனர். அதாவது 3-ல் 2 பங்கு வாக்குகளை ஜான்குமார் பெற்றுள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் 3-ல் ஒரு பங்கு வாக்கினைத்தான் பெற்றுள்ளார். இந்த வெற்றிக்கு பாடுபட்ட கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எதிர்க்கட்சியினர் நெல்லித்தோப்பு இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் நேரங்களில் ஆட்சிமாற்றம் என்றே பிரசாரம் செய்தனர். அப்போதே மக்கள் அவர்களுக்கு மரண அடி கொடுத்தனர். ஆனால் இப்போதும் ஆட்சி மாற்றம் என்று கூறி பிரசாரம் மேற்கொண்டனர். அவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் அவர்களை எதிர்க்கட்சி வரிசையில்தான் மக்கள் அமர சொல்லியுள்ளார்கள். எதிர்க்கட்சி வேலையை அவர்கள் செய்யாமல் எதிரிக்கட்சியாக செயல்படுகிறார்கள். ஆட்சியை கவிழ்க்கவும் முயற்சி செய்தார்கள். எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி சட்டசபைக்கு வருவதும் கிடையாது. அங்கு வந்து மக்களுக்காக குரல் கொடுப்பதும் கிடையாது. அப்படியிருக்க எப்படி அவர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள்? இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் வெற்றி குறித்து மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் கூறியதாவது:-

கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலுக்குப்பின் முதல்-அமைச்சராக நாராயணசாமி பொறுப்பேற்றபின் பல தேர்தல்களை சந்தித்து உள்ளோம். இந்த தேர்தல்களில் எல்லாம் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளோம்.

நாங்கள் மக்கள் நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். மத்திய அரசும், கவர்னரும் தொடர்ந்து தடைகள் செய்தாலும் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். இந்த வெற்றி கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

Next Story