சயான் கோலிவாடா தொகுதியில் கேப்டன் தமிழ்ச்செல்வன் வெற்றி 2-வது முறையாக எம்.எல்.ஏ. ஆனார்


சயான் கோலிவாடா தொகுதியில் கேப்டன் தமிழ்ச்செல்வன் வெற்றி 2-வது முறையாக எம்.எல்.ஏ. ஆனார்
x
தினத்தந்தி 25 Oct 2019 5:00 AM IST (Updated: 25 Oct 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தமிழரான கேப்டன் தமிழ்ச்செல்வன் 2-வது முறையாக எம்.எல்.ஏ. ஆனார்.

மும்பை, 

மராட்டிய சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தமிழரான கேப்டன் தமிழ்ச்செல்வன் 2-வது முறையாக எம்.எல்.ஏ. ஆனார்.

2 தமிழர்கள் போட்டி

மராட்டிய மாநில சட்டசபை தேர்தலில் மும்பை சயான் கோலிவாடா தொகுதியில் பா.ஜனதா சார்பில் தமிழர் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தமிழரான கணேஷ்குமார் நிறுத்தப்பட்டார். இதனால் சயான் கோலிவாடாவில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மராட்டியம் முழுவதும் உள்ள தமிழர்கள் இடையே ஏற்பட்டது.

இந்த தொகுதியில் முக்கிய கட்சிகள் சார்பில் போட்டியிட்ட 2 தமிழ் வேட்பாளர்கள் தவிர நவநிர்மாண் சேனாவின் ஆனந்த் காம்ளே, வஞ்சித் பகுஜன் அகாடியின் ஆமீர் எட்ரெசி உள்ளிட்ட 11 பேர் களத்தில் இருந்தனர்.

கடந்த 21-ந் தேதி நடந்த தேர்தலின் போது இந்த தொகுதியில் 50.75 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

கேப்டன் தமிழ்ச்செல்வன் வெற்றி

சயான் கோலிவாடா தொகுதியில் பதிவான வாக்குகள் சயான் கிழக்கு ஜெயின் சொசைட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வைத்து நேற்று எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தம் 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஆரம்பம் முதலே கேப்டன் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்து வந்தார்.

வாக்கு எண்ணிக்கை முடிவில் கேப்டன் தமிழ்ச்செல்வன் 54 ஆயிரத்து 845 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கணேஷ்குமாருக்கு 40 ஆயிரத்து 894 வாக்குகள் கிடைத்து இருந்தன. இதன் மூலம் கேப்டன் தமிழ்ச்செல்வன் 13 ஆயிரத்து 951 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

புதுக்கோட்டையை சேர்ந்தவர்

சயான் கோலிவாடா தொகுதியில் வெற்றி வாகை சூடி 2-வது முறையாக மராட்டிய சட்டசபைக்கு செல்லும் தமிழரான கேப்டன் தமிழ்ச்செல்வன் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி தாலுகாவில் உள்ள பிலவிடுதி கிராமத்தை சேர்ந்தவர்.

இவர் கடந்த 30 ஆண்டுகாலமாக மும்பையில் வசித்து வருகிறார். இவரது மனைவி கமலா. இவர்களுக்கு மகாலெட்சுமி, வைஷாலி என்ற மகள்கள் உள்ளனர்.

கேப்டன் தமிழ்ச்செல்வன் இளம் வயதில் வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையுடன் மும்பைக்கு வந்தார். அந்த ஆசை கைக்கூடாமல் போனதால் மும்பை துறைமுகத்தில் கூலி வேலை செய்யத்தொடங்கினார்.

படிப்படியாக உயர்ந்து மத்திய ரெயில்வேயின் கிளியரிங் ஆபிஸ் முகவரானார். இதை தொடர்ந்து கடின உழைப்பால் தனியாக ஏஜென்சி தொடங்கி நடத்தி வந்தார்.

கவர்னர் விருது

பொருளாதார ரீதியாக ஓரளவு உயர்ந்த பிறகு தமிழர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய தொடங்கினார். இவரின் மக்கள் சேவையை பாராட்டி தமிழர்கள் ‘கேப்டன்' என்று அழைக்க தொடங்கினா்.

மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது படுகாயங்களுடன் உயிருக்கு போராடி பலரை கைவண்டி மூலம் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்று காப்பாற்றினார். இதை கவுரவிக்கும் வகையில் அப்போதைய மராட்டிய கவர்னர் எஸ்.சி. ஜமீர் கேப்டன் தமிழ்ச்செல்வனுக்கு “வீரத்தமிழன்'' விருதை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து மும்பை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்று சயான் கோலிவாடாவில் உள்ள 168-வது வார்டு கவுன்சிலரா னார். 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சயான் கோலிவாடா தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார். தற்போது மீண்டும் அதே தொகுதியில் வெற்றி பெற்று உள்ளார். 2-வது முறையாக வெற்றி பெற்ற கேப்டன் தமிழ்ச்செல்வனுக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள், பிரமுகர்கள், பா.ஜனதாவினர், கூட்டணி கட்சியினர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Next Story